பொன்பரப்பி சம்பவம் பொறுமையாக அணுக வேண்டும்...! டாக்டர் ராமதாசுக்கு வைகோ வேண்டுகோள்

Ponparappi issue mdmk leader vaiko requests Dr Ramadoss into stop spread violence

by Nagaraj, May 1, 2019, 15:51 PM IST

தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு பொன்பரப்பி சம்பவத்தை பொறுமையாக அணுக வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொன்பரப்பி சம்பவத்தைக் கண்டித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன், பேராயர் எஸ்றா சற்குணம் ஆகியோர் பேசிய கருத்துக்களுக்கு எதிராக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்த அறிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராமதாசுக்கு வேண்டுகோள் விடுத்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா,டாக்டர் கலைஞர் பெருந்தலைவர் காமராசர், பொது உடைமை தோழர் ஜீவா, போன்ற மாபெரும் தலைவர்கள் அனைத்துப் பிரிவினரையும் அரவணைத்து அரசியல் நடத்தி வந்திருக்கின்றார்கள். அதன் விளைவாக, தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கின்றது. எவ்வளவோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒருவரையொருவர் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுகின்ற நிலையோ, வன்முறையைத் தூண்டாமல் இருப்பதுவோதான், இந்த மண்ணுக்குப் பெருமை.

பொன்பரப்பி வட்டாரத்தில் தலித் மக்கள் வாக்கு அளிக்க முடியாமல் தடுக்கப்பட்டனர். தங்களுடைய ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டதால் உரிமை கேட்ட தலித் மக்களுடைய வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. வன்முறை தாண்டவமாடியது.

உரிய நடவடிக்கை கோரி, ஏப்ரல் 24 -ம் தேதி, வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான எங்கள் தோழமைக் கட்சிகள் அனைத்தும் பங்கேற்றன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் சகோதரர் தொல்.திருமாவளவன், பொது உடைமை இயக்கத் தோழர் முத்தரசன், பேராயர் எஸ்றா சற்குணம் போன்றவர்கள் உரை ஆற்றினர். அங்கே தவறான கருத்துகள் எதுவும் பேசப்படவில்லை. எந்த ஒரு சமுதாயத்தின் பெயரையும், முத்தரசன் குறிப்பிடவில்லை.
முத்தரசன் பேசும்போது, தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் மருத்துவர் ஐயா அவர்களை மதித்துத்தான் பேசினார். அவரது பெயரைக்கூடக் குறிப்பிடவில்லை.

ஆயுதப் போராட்டத்தை நக்சலைட்டுகள் தொடங்கினார்கள்; நாங்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. வன்முறை ஆபத்தானது; ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், வன்முறை கூடாது என்பதுதான் எங்கள் கொள்கை, அதுதான் எங்கள் நெறிமுறை என்ற அடிப்படையில்தான், முத்தரசன் பேசி இருக்கிறார்.

ஆனால், சிலர் அதைத் தவறாகத் திரித்து இருக்கின்றார்கள். அதனால், பாட்டாளி மக்கள் கட்சி தரப்பில் ஒரு கடுமையான அறிக்கை தந்துள்ளனர். அதைத் துண்டு அறிக்கைகளாகவும் அச்சிட்டுப் பரப்பி வருகின்றார்கள். வன்முறையைத் தூண்டுகின்ற வகையில் அந்தக் கருத்துகள் இருக்கின்றன. அந்த வரிகளை நான் திரும்பக் கூற விரும்பவில்லை. தயவு செய்து அதைப் பரப்ப வேண்டாம்.

முத்தரசன் மிக மென்மையானவர், எளிமையானவர், அன்பானவர், எந்த நேரமும் சிரித்த முகத்தோடு இருப்பவர். யாரிடமும் பகைமை கொள்ள மாட்டார். அத்தகையவருக்கு, அலைபேசியில் அச்சுறுத்தல்களும், மிரட்டல்களும் வருகின்றன என்பதை, சற்று நேரத்திற்கு முன்பு நான் அவரிடம் அலைபேசியில் பேசியபோது அறிந்தேன். இது தமிழகத்திற்கு நல்லது அல்ல.

எனவே, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர், பெருமதிப்பிற்குரிய மருத்துவர் ஐயா அவர்கள், இந்த நிலை தொடர விடாமல் தடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். அந்தப் பொறுப்பு அவருக்கு இருக்கின்றது. அதைத்தான் தி.மு.க. தலைவர் ஸ்டாலினும், ஒரு அறிக்கையில் மிக நாகரிகமான முறையில் கேட்டுக்கொண்டு இருக்கின்றார். சிபிஐ,சிபிஎம், பொது உடைமை இயக்கத்தினர் தகுந்த விளக்கங்களைத் தந்து இருக்கின்றார்கள்.

தமிழகத்தில் அமைதியும், சமூக நல்லிணக்கமும் நிலவினால்தான், ஜனநாயகத்துக்கு நல்லது. நமது வருங்காலத் தலைமுறை, பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க முடியும். தமிழகத்தின் பொதுநலனைக் கருத்தில் கொண்டு, மிகுந்த பொறுமையோடு இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும் என நானும் வேண்டுகோளை விடுக்கின்றேன் என

வைகோ தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிழட்டுச் சிறுத்தை என சீறிய எஸ்ரா சற்குணம்..! சிங்கமென குதறி திசை திருப்ப பார்க்கும் ராமதாஸ்..!

You'r reading பொன்பரப்பி சம்பவம் பொறுமையாக அணுக வேண்டும்...! டாக்டர் ராமதாசுக்கு வைகோ வேண்டுகோள் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை