சென்னையில் மெட்ரோ ரயில் பணியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறபட்டதால் மெட்ரோ ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது. அதேசமயம், மெட்ரோ ரயில் சேவையை திட்டமிட்டு நிறுத்தியதாக 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
சென்னையில் மெட்ரோ ரெயில் நிர்வாகத்துக்கு எதிராக செயல்பட்டதாக 8 ஊழியர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர். கடந்த டிசம்பர் மாதம் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை குறித்து, ஊழியர்கள் விளக்கம் அளிக்கலாம் என்று துறை ரீதியிலான வாய்ப்பும் அளிக்கப்பட்டது. இதற்கு ஊழியர்கள் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்த மெட்ரோ ரெயில் நிர்வாகம் 8 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவித்தது.
இதன் பின்னர் அவர்கள் 8 பேரும் நிர்வாக இயக்குனரை சந்தித்து முறையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் நிர்வாக இயக்குனரை சந்தித்து ஊழியர்கள் முறையிடாத நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ தலைமை நிர்வாக அலுவலகத்திற்கு வந்த ஊழியர்கள் சிலர், அங்கு அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் போராட்டம் நடக்கும் இடத்துக்கு வந்த தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனால் பின்னர் மீண்டும் போராட்டம் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனால் மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. நேற்று மே தின விடுமுறை என்பதால் மெட்ரோ சேவை இல்லாமல் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் போராட்டத்தை ஊழியர்கள் நேற்று வாபஸ் பெற்றனர். ஊழியர்களுடன் தொழிலாளர் நலத்துறை, மெட்ரோ நிர்வாகம் நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது.
இதற்கிடையே, மெட்ரோ ரயில் சேவையை திட்டமிட்டு நிறுத்தியதாக 3 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மெட்ரோ ஊழியர்கள் மனோகரன், பிரேம் குமார் மற்றும் சிந்தியா ரோஷன் சாம்சன் ஆகிய 3 ஊழியர்களும் சஸ்பெண்ட் ஆகியுள்ளனர்.