இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளில், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 4 நாட்கள் பிரச்சாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு, கூட்டணி தர்மத்தின் படி தேமுதிக முழு ஆதரவளிக்கும் என்றும், அக்கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக தேமுதிக தொண்டர்கள் பாடுபடுவார்கள் என்றும் விஜயகாந்த் அறிவித்திருந்தார். ஆனால் தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட மறுப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி, கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் பிரேமலதா பிரச்சாரத்தில் ஈடுபடுவாரா? மாட்டாரா? என்ற விவாதம் எழுந்து சர்ச்சையானது.
இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிரேமலதா விஜயகாந்த், வரும் 13-ம் தேதி முதல் 16-ந் தேதி வரை தொகுதிக்கு ஒரு நாள் வீதம் 4 தொகுதிகளிலும் 4 நாட்களுக்கு பிரச்சாரம் செய்வார் என்று தேமுதிக தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.