ஒடிசாவை சூறையாடி பெரும் நாசம் செய்து விட்ட ஃபானி புயல், தற்போது தனது சீற்றத்தை இழந்ததால் மே.வங்க மாநிலத்திற்கு புயல் அபாயம் குறைந்தது . குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த ஃபானி புயல் தற்போது வங்கதேசம் நோக்கி பயணிக்கிறது.
வங்கக் கடலில் உருவாகி தமிழகத்தை மிரட்டப் பார்த்த ஃபானி புயல் ஒடிசா நோக்கி திசை மாறியது. அதி தீவிரப் புயலாக உருவெடுத்த ஃபானி புயல் நேற்று காலை ஒடிசாவின் பூரி அருகே கரை கடந்தது. புயல் கரை கடந்த போது சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மணிக்கு 230 கி.மீ. வேகத்திற்கும் அதிகமாக பலத்த மழையுடன் சுழன்றடித்த கூறாவளியால் பெரும் பொருட்சேதம் ஏற்பட்டது. மரங்கள், மின் கம்பங்கள், கட்டடங்கள் சின்னாபின்னமானது.
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புயலின் கோரத்தாண்டவம் இருக்கும் என்பது பற்றிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அப்புறப்படுத்தப்பட்டதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுவரை 8 பேர் மட்டுமே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலின் சூறையாடலில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அளவுக்கு பொருட்சேதம் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ள நிலையில், ஒடிசாவுக்கு அவசர கால உதவிகள் வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று பகல் முழுவதும் ஒடிசாவில் சுற்றிச் சுழன்றடித்து நாசம் செய்த ஃபானி புயல் வடமேற்காக மே.வங்கம் நோக்கி திசை திரும்பியது. இதனால் மே.வங்கத்திலும் புயல் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சத்தில் அவசரகால முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் கொஞ்சம், கொஞ்சமாக சீற்றம் தணிந்த ஃபானி புயல் நள்ளிரவில் மே.வங்கத்தின் காரக்பூர் அருகே கரையைக் கடந்தது. அப்போது தீவிரம் குறைந்து மணிக்கு 90 கி.மீ வேகத்தில் காற்றும், பலத்த மழையும் கொட்டியது. இதனால் புயலின் கோரப்பிடியில் இருந்து மே.வங்க மாநிலம் தப்பித்தது. புயல் அபாயத்தால் நேற்று மாலை முதல் மூடப்பட்டிருந்த கொல்கத்தா விமான நிலையத்தில் இன்று காலை விமான போக்குவரத்து தொடங்கியது.
ஃபானி புயல் படிப்படியாக வலுக் குறைந்து வடக்கு, வடகிழக்கு திசையில் நகர்கிறது . வங்கதேசம் நோக்கி செல்லும் இந்தப் புயல் பின்னர் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.