தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனை கூட்டம் வரும் ஜூன் 3ம் தேதி நடைபெறுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. போட்டியிட்ட அத்தனை இடங்களிலும் வென்றது. காங்கிரஸ் கட்சியும் தேனி தவிர மற்ற தொகுதிகளில் வென்றுள்ளது. நாடாளுமன்றத்தில் தற்போது மூன்றாவது பெரிய கட்சியாக தி.மு.க. உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், தி.மு.க.வின் அடுத்த கட்ட அரசியல் குறித்து ஆலோசிப்பதற்காக வரும் ஜூன் 3ம் தேதியன்று கருணாநிதி பிறந்த நாளில், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. இது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் ஜூன் 3ம் தேதி காலை 10 மணிக்கு அறிவாலயத்தில் நடைபெறும். இதில், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். கூட்டத்தில் கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்படும்
இவ்வாறு அன்பழகன் கூறியுள்ளார்.