தமிழக மக்களுக்கு ஒரு ‘ஷாக்’ காத்திருக்கிறது. ஆம். விரைவில் மின்சாரக் கட்டணங்களை உயர்த்தப் போகிறது தமிழக அரசு.
தமிழகத்தில் மின்விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகளை டான்ஜெட்கோ நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் ஏற்கனவே கடும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனால், வீடுகள், தொழில் நிறுவனங்கள் உள்பட அனைத்து விதமான மின் இணைப்புகளிலும் மின்சார கட்டணத்தை உயர்த்த அரசு முடிவெடுத்தது. மேலும், மின்சார ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, குறிப்பிட்ட விகிதத்தில் மின் கட்டணத்தை உயர்த்தியாக வேண்டிய கட்டாயம் உள்ளது.
எனினும், தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் வந்ததால், மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படுவதை தள்ளி வைத்திருந்தனர். தற்போது இன்னும் சில நாட்களில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாம். கட்டணத்தை அதிகபட்சமாக 30 சதவீதம் வரை உயர்த்துவதற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் டான்ஜெட்கோ அனுமதி கோரியிருக்கிறது.
இது பற்றி, மின்ஊழியர்கள் தொழிற்சங்க மத்திய அமைப்பு(சி.ஐ.டி.யு) மாநில தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், ‘‘மின் கட்டணத்தை 30 சதவீதம் வரை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்காக ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது. தற்போது மின்வாரியம், ரூ.7,760 கோடி நஷ்டத்தில் இயங்குகிறது. இதற்கு காரணம், வாரியம் சரியாக செயல்படாததுதான்.
தமிழகத்திற்கு 16,300 மெகாவாட் மின்சாரம் தேவை. இதில் மூன்றில் ஒரு பங்கு மின்சாரத்தை அதிக விலைக்கு வெளியே வாங்குகிறோம். அதே போல், காற்றாலைகளில் யூனிட் 3.39 காசுக்கு வாங்க ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். ஆனால், பேங்கிங் சிஸ்டம் என்ற பெயரில் மிகவும் காலதாமதமாக பணம் கொடுப்பதால், அதற்கு யூனிட் 5.60 காசுகள் என்ற விகிதத்தில் கொடுக்கிறார்கள். இதெல்லாம்தான் நஷ்டத்திற்கு காரணம்’’ என்றார்.