இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதியின்றி, மருத்துவப் பட்டம் மற்றும் டிப்ளமோ வகுப்புகளை நடத்திய எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும், இந்த பணத்தை பள்ளிக் கட்டங்கள் கட்ட செலவழிக்கவும் கூறியிருக்கிறது.
தமிழ்நாடு அரசின் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளித்து பாடத்திட்டங்களை வகுத்து தருகிறது. இந்த பல்கலைக்கழகம், தபால் வழியில் சில மருத்துவ டிப்ளமோ வகுப்புகளை நடத்தி வந்தது. எச்.ஐ.வி. மருந்துகள், பாலியல் மருந்துகள், குடும்ப மருந்துகள் என்ற டிப்ளமோ வகுப்புகள் மற்றும் மெடிக்கல் ஜெனிடிக்ஸ், கிளினிக்கல் டயபட்டாலஜி என சில 2 ஆண்டு கோர்ஸ்களையும் நடத்தியது.
இதை எதிர்த்து தமிழ்நாடு டாக்டர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் சீனிவாசன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ரிட்மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், இது தொடர்பாக அகில இந்திய மருத்துவக் கவுன்சிலின் தரப்பு வாதத்தைக் கேட்டறிந்தார். எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் நடத்தும் இந்த கோர்ஸ்களுக்கு கவுன்சிலின் அங்கீகாரம் பெறவில்லை என்றும் அதனால் மனுதாரரின் வாதங்களை ஏற்கலாம் என்றும் மருத்துவக் கவுன்சில் பதிலளித்தது. ஆனால், கவுன்சிலின் அனுமதியின்றி இந்த வகுப்புகளை நடத்துவதற்கு தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு அதிகாரம் உள்ளதாக அதன் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பல்கலைக்கழகத்தின் வாதத்தை ஏற்காத நீதிபதி, மருத்துவக் கவுன்சிலின் அனுமதி பெறாமல் நடத்தப்படும் கோர்ஸ்களுக்கு தடை விதித்து தீர்ப்பு கூறியுள்ளார். மேலும், இந்த வழக்கின் செலவுத் தொகையாக ரூ.5 லட்சத்தை பல்கலைக்கழகம் அளிக்க வேண்டும் என்றும் அந்த தொகையை பள்ளிக் கல்வித் துறையிடம் 4 வாரங்களுக்குள் அளித்து, பள்ளிக் கட்டடங்கள் கட்டுவதற்கு பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.