அதிமுகவில் வெடித்தது உட்கட்சிப் பூசல் ... கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேணும்... ராசன்செல்லப்பா எம்எல்ஏ பேட்டியால் பரபரப்பு

Admk MLAs Rajan chellappa wants to change in party leader ship:

by Nagaraj, Jun 8, 2019, 13:14 PM IST

அதிமுகவில் சமீப காலமாக புகைந்து கொண்டிருந்த உட்கட்சிப் பூசல் பகிரங்கமாக வெடித்துள்ளது.கட்சியின் தலைமைப் பொறுப்பில் ஓபிஎஸ், இபிஎஸ் என இருவர் செயல்படுவதற்கு எதிராக மதுரை வடக்கு மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான ராசன்செல்லப்பா பகிரங்கமாக போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.

அதிமுகவுக்கு செல்வாக்கு படைத்த ஒற்றைத் தலைமை தான் வேண்டும் . உடனே பொதுக் குழுவைக் கூட்டி, ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட செல்வாக்கு படைத்த ஒருவரை தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை ராசன் செல்லப்பா எழுப்பியுள்ளது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் கட்சிக்கு ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் ஓபிஎஸ்சும், முதல்வர் பொறுப்பில் இபிஎஸ்சும் உள்ளனர். மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே, இவர்கள் இருவருக்குமிடையே மனக்கசப்பு ஏற்பட்டு விட்டதாகக் கூறப்பட்டது. வெளியில் தெரியாமல் இருந்த இந்தப் பூசல் மக்களவைத் தேர்தலுக்குப் பின் சமீப நாட்களாக பகிரங்கமாகவே வெடிக்கத் தொடங்கி விட்டது எனலாம்.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் அதிமுகவுக்கு ஒரு அமைச்சர் பதவி தர முன்வந்தது பாஜக . மக்களவைத் தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே அதிமுகவில் வெற்றி தனது மகனுக்கு அந்தப் பதவியைப் பிடிக்க ஓபிஎஸ் பகீரதப் பிரயத்தனம் செய்தார். ஆனால் எடப்பாடி தரப்பின் முட்டுக்கட்டையால் யாருக்குமே மந்திரி பதவி கிடைக்காமல் போய்விட்டது. அப்போதே ஓபிஎஸ்சுக்கும், எடப்பாடிக்கும் இடையே மோதல் ஆரம்பித்துவிட்டது என செய்திகள் கசிய ஆரம்பித்துவிட்டது. இருவருக்கும் இடையே மோதல் என கடந்த ஒரு வாரமாக புகைந்து வந்த பூசல் இன்று ராசன்செல்லப்பா கொளுத்திப் போட்டதன் மூலம் பகிரங்கமாக வெடித்துள்ளது.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ராசன்செல்லப்பா, கட்சிக்குள் நிலவும் பிரச்னைகள் குறித்து கொந்தளித்து விட்டார் என்றே கூறலாம் அந்தளவுக்கு அவர் கூறுகையில், அதிமுகவில் இரண்டு தலைமை இருப்பதால் அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்றே தெரியவில்லை.

ஜெயலலிதாவிடம் இருந்தது போன்ற ஆளுமைத்திறன் தற்போது இல்லை. ஆளுமை மிக்க ஒற்றைத் தலைமையை உருவாக்க வேண்டும். சரியான தலைமை இல்லாததால் தான் மக்களவைத் தேர்தலில் அதிமுக செல்வாக்குன் இருந்த தொகுதிகளில் கூட தோல்வி நேரிட்டது.

இதனால் கட்சி செல்வாக்காக இருந்தால் மட்டும் போதாது. தலைமையும் செல்வாக்கு படைத்த ஒருவரின் தலைமையின் கீழ் இயங்க வேண்டும். இதற்காக அதிமுக பொதுக் குழுவை உடனே கூட்ட வேண்டும். ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட செல்வாக்குப் படைத்த சுயநலமில்லாத ஒருவரை கட்சியின் தலைமைப் பதவியில் அமர்த்த வேண்டும்.

தேர்தலில் வெற்றி பெற்ற தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமாருடன் 9 எம்எல்ஏக்கள் ஜெயலலிதா சமாதிக்கு செல்லாதது ஏன்? என்றும் தெரியவில்லை.
9 எம்எல்ஏக்களை தடுத்து நிறுத்தியது யார்? என்றும் தெரியவில்லை.

அதிமுகவுக்கு ஒரே தலைமையை உருவாக்குவது பற்றி அதிமுகவின் பொதுக்குழுவில் வலியுறுத்துவோம். கட்சியில் என்ன பூசல் இருந்தாலும் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாகவே உள்ளோம் என்று ராசன்செல்லப்பா கொடுத்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட தலைவர் என்று ராசன்செல்லப்பா யாரைக் குறிப்பிட்டுச் சொல்கிறார் என்ற பெரும் விவாதமே இப்போது அதிமுகவில் நடந்து வருகிறது. இதனால் அதிமுகவில் அடுத்தடுத்து பெரும் திருப்பங்களுக்கும், குழப்பங்களுக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது என்பது மட்டும் நிச்சயம் என்று தெரிகிறது.

You'r reading அதிமுகவில் வெடித்தது உட்கட்சிப் பூசல் ... கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேணும்... ராசன்செல்லப்பா எம்எல்ஏ பேட்டியால் பரபரப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை