ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் நடிக்கும் குழந்தைகளை ஆபாசமாக காட்டாதீர்கள் என்று தொலைக்காட்சிகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்ப தனது அமைச்சகத்திற்கு உத்தரவிட்டார். அதன்படி, தொலைக்காட்சிகளுக்கு அந்த அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டதாவது;
தொலைக்காட்சிகளில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் குழந்தைகள் பங்கேற்கும் போது அவர்களுக்கு கவர்ச்சி உடையில் காட்டுகிறார்கள். சினிமாக்களில் நடிகர், நடிகைகள் நடிக்கும் காட்சிகளை சிறிய குழந்தைகளை நடிக்க வைப்பதே அந்த குழந்தைகளை பாதிக்கச் செய்யும். அதேபோல், அவர்களை வயதுக்கு மீறிய வகையில் நடிக்க வைப்பது தவறானதாகும்.
கேபிள் டி.வி. ஒழுங்குமுறைச் சட்டத்தில், தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு பல விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அந்த விதிமுறைகளை அனைத்து தொலைக்காட்சிகளும் ஒழுங்காக பின்பற்ற வேண்டும். எனவே, கேளிக்கை நிகழ்ச்சிகளில் குழந்தைகளை ஆபாசமாகவோ, வன்முறையைத் தூண்டும் வகையிலோ காட்டக் கூடாது.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவுறுத்தலுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதாகவும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.