ஈரோட்டில் மடிக்கணினி வழங்கும் விழாவில் செய்தியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக அதிமுக எம்எல்ஏ மகன் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர்களுக்கு உடனடியாக முன்ஜாமீறும் வழங்கியுள்ளனர்.
ஈரோடு நகரில் கடந்த திங்கட்கிழமை மாணவர்களுக்கு அரசு சார்பில் மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது மடிக்கணினி வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடியால் சலசலப்பு ஏற்பட்டது. இதனை செய்தியாளர்கள் படம் பிடித்த போது, அதிமுக எம்எல்ஏ ராமலிங்கத்தின் மகனும் மற்றும் பலரும் சேர்ந்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் செய்தியாளர்கள் கோவிந்தராஜ், நவீன் ஆகிய இருவரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆளும் கட்சியினர் நடத்திய இந்த கண்மூடித்தனமான தாக்குதலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு தலைவர்களும், பத்திரிகையாளர் சங்கங்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் குரல் கொடுத்தனர்.
இந்நிலையில் இந்தத் தாக்குதல் தொடர்பாக ஈரோடு வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ ராமலிங்கத்தின் மகன் ரத்தன் பிரித்திவ் உட்பட 5 பேர் மீது ஈரோடு வடக்கு போலீசார் நேற்றிரவு 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
கண்மூடித்தனமாக காக்குதல் நடத்திய ஆளும் கட்சி எம்எல்ஏ மகன் உள்ளிட்ட 5 பேர் மீது சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர்கள் அனைவருக்கும் காவல் நிலையத்திலேயே போலீசார் முன் ஜாமீனும் வழங்கினர். தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யாமல் போலீசாரே முன் ஜாமீன் வழங்கியதற்கு செய்தியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.