இது என்னடா தீபாவுக்கு வந்த சோதனை..! மாதவன் தான் போலி அதிகாரியை ஏவிவிட்டாரா ?

Feb 12, 2018, 15:09 PM IST

சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி, ஜெ.தீபாவிடம் இருந்து பணம் பறிக்க தன்னை மாதவன் பயன்படுத்திக் கொண்டதாக போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்த பிரபாகரன் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ஜெ.தீபாவின் வீட்டிற்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரி எனக்கூறி டிப்டாப் ஆசாமி வந்தார். அவர், தனது கையில் சோதனைக்கான கடிதம், மித்தேஷ் குமார் என்ற பெயரில் அடையாள அட்டை உள்ளிட்டவை ஜெ.தீபா மற்றும் அவரது கணவர் மாதவனிடம் காண்பித்துள்ளார். இதை நம்பிய இருவரும், அதிகாரி போல் வந்தவரை வீட்டிற்குள் அனுமதித்தனர்.

அந்த நபர் வீடு முழுவமு சோதனை என்ற பெயரில் அலசி ஆராய்ந்து வந்தார். அதற்குள், வருமான வரித்துறை அதிகாரி வந்திருப்பதாக தகவல் போலீஸ் ஸ்டேஷன் வரை பரவியது. இதையடுத்து, போலீஸ் அதிகாரிகள் தீபாவின் வீட்டிற்கு விரைந்தனர்.

போலீஸ் வருவதை தெரிந்துக் கொண்ட அந்த நபர், சோதனை செய்வதுப்போல் வீட்டு சுவர் மீது ஏறி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தீபாவின் வீட்டிற்கு வந்தது போலி அதிகாரி என்பது பின்னர் தெரியவந்தது. இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படைக் கொண்டு சம்பந்தப்பட்ட நபரை தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு போலி அதிகாரியாக வந்த நபர் மாம்பலம் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.

இதன்பின்னர், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தனது பெயர் பிரபு என்கிற பிரபாகரன் என தெரியவந்துள்ளது. மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவலை பிரபாகரன் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து போலீசாரிடம் பிரபாகரன் கூறியதாவது: எனது ஊர் விழுப்புரம். நான் ஒரு எம்பிஏ பட்டதாரி. விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் ஹோட்டல் நடத்தி வருகிறேன். தன்னுடைய ஹோட்டலுக்கு தீபாவின் கணவர் மாதவன் வந்தபோது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. மேலும், தனக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் இருப்பதை தெரிந்த மாதவன் அதற்கு உதவி செய்வதாகவும் வாக்குறுதி அளித்தார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு எனக்கு கொரியர் ஒன்று வந்தது. அதில் சில ஆவரணங்களை மாதவன் அனுப்பி இருந்தார். ஒரு போலி ஐடி அதிகாரி அடையாள அட்டையும் இருந்தது. அதையடுத்து, சென்னை வந்து அவரை நேரில் சந்தித்தேன். அப்போது, ஒரு வாரண்ட் நகலை என்னிடம் கொடுத்து தீபாவின் வீட்டிற்கு சென்று வருமான வரித்துறை அதிகாரி போல் நடிக்க வேண்டும் எனக் கூறினார். நான் முதலில் தயங்கினேன். அதற்கு அவர் எல்லாம் நடிப்புத்தான். இது ஒரு ஒத்திகை என கூறினார்.

அவர் கூறியது போல் நான் தீபா வீட்டிற்கு சென்று வருமான வரித்துறை அதிகாரி போல நடித்தேன். ஆனால், அங்கு ஊடகங்கள் குவிந்துவிட்டன. இதனால் எனக்கு பதற்றமாகிவிட்டது. உடனே மாதவனிடம் போன் போட்டு சொன்னபோது தான் என்னை தப்பி ஓட சொன்னார்.

இவ்வாறு பிரபாகரன் கூறியதை போலீசார் வீடியோ பதிவு செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, போலீசார் பிராபகரன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து மாதவனிடம் விசாரிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

You'r reading இது என்னடா தீபாவுக்கு வந்த சோதனை..! மாதவன் தான் போலி அதிகாரியை ஏவிவிட்டாரா ? Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை