அதிமுக தொண்டர்கள் கைகாட்டுபவர்களுக்கே அரசுப் பணி என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேச்சால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் “80 ஆண்டுகள் ஆனாலும் அதிமுக-வை அசைக்க முடியாது. சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்த பிறகு, நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறிய நிலையில் காணப்படும்.
தொண்டர்கள் சோர்வோடு இருப்பது எதிர்காலத்தில் இருக்காது. பல்வேறு திட்டங்கள் உங்களை நோக்கி கொண்டு வர வேண்டும் என ஆசை இருக்கிறது. ஆனால், அதற்குத் தொடர்ந்து இடர்ப்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன.
அதைத் தகர்த்தெறியும் சக்தி அதிமுகவுக்கு இருக்கிறது. இனி கவலைப்படத் தேவையில்லை. எதிர்காலத்தில் தொண்டர்கள் கை காட்டுபவர்களுக்கே அரசுப்பணி கிடைக்கும்” என்றார்.
செங்கோட்டையனின் இந்தப் பேச்சு தமிழக மக்களிடையே கடும் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது. அரசின் திட்டங்கள் பெற அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை கட்டாயம் இருக்க வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ ஏற்கனவே பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.