உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள திருமலை அடர்ந்த வனப் பகுதிக்கு மத்தியில் மலைப்பாதையில் பசுமை கொஞ்சும் நகரமாக திருமலை உள்ளது. இங்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக ஆந்திர மாநில அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1500 டிரிப்புகள் திருப்பதி திருமலை இடையே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இது தவிர பல்வேறு மாநிலங்களிலிருந்து வரும் கார், பைக், வேன் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களின் மூலமாக பக்தர்கள் திருமலைக்கு வந்து செல்கின்றனர்.
இதனால் ஏழுமலையான் கோவில் சராசரியாக ஒரு நாளைக்கு எழுபது ஆயிரம் முதல் ஒரு லட்சம் பக்தர்கள் வரை வந்து செல்கின்றனர். இந்நிலையில் திருமலையில் உள்ள காற்று மாசு குறித்து கண்காணிப்பதற்காக மாநில மாசுக் கட்டுப்பாட்டு துறை சார்பில் காற்றின் அளவு குறித்து அளவிடுவதற்காக கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இதன் மூலமாக ஐதராபாத், டெல்லி, விஜயவாடா ஆகிய பெருநகரங்களில் 60 மைக்ரான் அளவு காற்று மாசு அடைந்த நிலையில் திருமலையில் 100 மைக்ரான் அளவு காற்று மாசு அடைந்து இருப்பதாக தேவஸ்தானத்திற்கு மாசு கட்டுப்பாட்டு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உடனடியாக திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் இல்லாவிட்டால் காற்றில் கலக்க கூடிய நைட்ரஜன் ஆக்சைடு நச்சு வாயு சேர்ந்து இங்கு வரக்கூடிய பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் உடல் உபாதைகளுக்கு உள்ளாகக் கூடிய நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.
இதனால் திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் மாசு கட்டுப்பாட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு திருமலைக்கு பாதிப்பில்லை என்று சான்றிதழ் பெற்ற வாகனங்களை மட்டும் திருமலைக்கு அனுமதிக்கும் விதமாக ஆலோசித்து வருகின்றனர்.
மேலும் திருமலைக்கு டீசல் வாகனங்களை குறைத்து படிப்படியாக பேட்டரி வாகனங்களை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இது குறித்து அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு செய்தியாளரிடம் பேசுகையில் திருமலையில் டீசல் வாகனங்களை குறைத்து பேட்டரி வாகனங்களை அதிகப்படுத்தும் விதமாக முதல் கட்டமாக திருமலையில் இயக்கப்பட்டு வரக்கூடிய இலவசப் பேருந்துகள் அனைத்தும் பேட்டரி வாகனங்களாக மாற்றப்படும் என தெரிவித்திருந்தார்.
சுற்றி வனப்பகுதி உள்ள திருப்பதி நகரை காட்டிலும் திருமலையில் குளிர்ச்சியாக இருந்து வந்த நிலையில் நாளுக்கு நாள் காற்றில் வாகனங்களின் நச்சுப்புகை கலப்பதால் திருமலையில் குளிர்ச்சி குறைந்து உஷ்ணம் அதிகரித்து வருகிறது. இதற்கு மாற்றுவழி ஏற்படுத்தாவிட்டால் வருங்காலத்தில் கடும் அவதிக்கு உள்ளாக நேரிடும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
-தமிழ்