மதுவும், பெட்ரோலும்தான் தமிழக அரசுக்கு 48 சதவீத வரி வருவாயை ஈட்டித் தருகிறது. மது விற்பனை மற்றும் பெட்ரோல், டீசல் விற்பனை மீதான வாட் வரி மூலம் கடந்த ஆண்டில் ரூ.42 ஆயிரத்து 414 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
தமிழக சட்டசபையில் வணிக வரிகள் துறையின் கொள்கை விளக்க குறிப்புகள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் உள்ள தகவல்கள் வருமாறு:-
கடந்த 2018-19ம் ஆண்டில் தமிழக அரசின் மொத்த வருவாய் 87,905.26 கோடி ரூபாய். இது முந்தைய ஆண்டை விட 20.17 சதவீதம் அதிகம். முந்தைய ஆண்டில்(2017-18) வருவாய் 73,148.28 கோடி ரூபாய்.
சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) வரம்புக்குள் வராத பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானங்களுக்கு வாட் வரி விதிக்கப்படுகிறது. இவற்றின் மூலம் 2018-19ம் ஆண்டில் 42 ஆயிரத்து 414 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. அதாவது, மொத்த வருவாயில் சுமார் 48 சதவீதம்.
இது தவிர, மாநில ஜி.எஸ்.டி. மூலம் ரூ.24 ஆயிரத்து 476 கோடியும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. மூலம் ரூ.12 ஆயிரத்து 425 கோடியும் தமிழக அரசுக்கு வரி வருவாயாக வந்துள்ளது.
அதே போல், கடந்த 2018-19ம் ஆண்டில் மொத்தம் 25 லட்சத்து 73 ஆயிரத்து 478 ஆவணங்கள் பதிவு செய்யப்ப்டடுள்ளன. இவற்றின் பதிவு கட்டணம், முத்திரைத்தாள் கட்டணம் மூலம் 11 ஆயிரத்து 71 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. முந்தைய ஆண்டில்(2017-18) 22 லட்சத்து 10 ஆயிரத்து 595 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், 9 ஆயிரத்து 121 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.