நெல்லை முன்னாள் மேயர் உள்ளிட்ட 3 பேர் படுகொலை வட மாநில கொள்ளை கும்பல் கைவரிசையா?

by Nagaraj, Jul 24, 2019, 14:45 PM IST
Share Tweet Whatsapp

நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி, அவருடைய கணவர் மற்றும் பணிப் பெண் ஆகிய 3 பேர் படுகொலை சம்பவத்தில் இன்னமும் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். நகை, பணத்துக்காக வட மாநில கொள்ளைக் கும்பல் கைவரிசை காட்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

நெல்லை மாநகராட்சியின் முதல் மேயராக 1996-ல் பதவி வகித்த உமாமகேஸ்வரி, தற்போது திமுகவில் நெல்லை மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராக இருந்து வந்தார். உமா மகேஸ்வரியும் அவரது கணவர் முருக சங்கரனும் நெல்லை ரெட்டியார்பட்டியில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி அருகே உள்ள ரோஸ் நகரில் வசித்து வந்தனர்.

நேற்று மாலை உமாமகேஷ்வரி, அவரது கணவர் முருக சங்கரன் இவர்களின் வீட்டில் பணிப் பெண்ணாக வேலை பார்த்து வந்த மாரி ஆகிய 3 பேரும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. மேலும் உமாமகேஸ்வரியும், அவரது கணவரும் அணிந்திருந்த நகைகள், பீரோவில் வைத்திருந்த நகை மற்றும் பணமும் கொள்ளை போயுள்ளது.

இந்தக் கொலைகளுக்கான காரணம் என்ன? யார் கொலை செய்தது? என்று கண்டுபிடிக்க நெல்லை போலீஸ் கமி‌ஷனர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து பிரச்சினையில் உறவினர்களால் கொலை நடந்ததா? நகை-பணத்துக்காக கொள்ளை கும்பல் கொலை செய்ததா? என்ற ரீதியில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உமா மகேஸ்வரியின் அண்ணன் மகனான மூளிக்குளம் பிரபு என்பவரை அழைத்து விசாரணை நடத்தினர். ஏற்கனவே அவர் மீது கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில்உமா மகேஸ்வரியிடம் அவர் அடிக்கடி பணம் கேட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் அவரை ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்தபோது அவரது செல்போன் எந்த பகுதியில் இருந்தது என்றும் விசாரணை நடந்தது. அவருக்கும் இந்தக் கொலை சம்பவத்துக்கும், தொடர்பு இல்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

மேலும் கொலை செய்யப்பட்ட உமா மகேஸ்வரியின் வீடு உள்ள பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் பலரும் தங்கியுள்ளதால் அவர்கள் மீதும் சந்தேகம் ஏற்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். விசாரணையில் அங்கு தங்கியிருந்த தொழிலாளர்களில் சிலர் தலைமறைவானது தெரியவந்ததால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட உமா மகேஸ்வரி எப்போதும் உபயோகப்படுத்தும் தாலி செயின், மற்றொரு செயின், மோதிரம், கம்மல், வளையல் ஆகியவற்றின் எடை மட்டும் சுமார் 30 பவுன் இருக்கும். மேலும் முருக சங்கரன் கழுத்தில் உள்ள தங்க சங்கிலி, தங்க கைக்கடிகாரம், மோதிரம் ஆகியவை சுமார் 20 பவுன் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுபோக அவர்களது வீட்டில் சுமார் 50 பவுன் நகைகள் முதல் 100 பவுன் நகைகள் வரை இருந்திருக்கலாம் என்றும், ரொக்கமாக ரூ.5 லட்சம் வரை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதை தெரிந்துகொண்ட வடநாட்டு கும்பல் இந்த நகை-பணத்துக்காக திட்டம் போட்டு கொலை செய்து, நகை-பணத்தை கொள்ளை அடித்து சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்தக் கொலையில் எப்படியும் குறைந்தபட்சம் 5 பேர் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள். அவர்கள் நெல்லையில் இருந்து வெளியூருக்கு ரயில் அல்லது பஸ் மூலம் தப்பி சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. ஆகவே ரெயில் மற்றும் பஸ் நிலையங்களில் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட 3 பேரின் சடலங்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் வி.எம்.சத்திரத்தில் உள்ள உமாமகேஸ்வரியின் மற்றொரு இல்லத்தில் அவரது உடலும், கணவரது உடலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக பிரமுகர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.


Leave a reply