நெல்லை மேயர் உமா மகேஸ்வரி கொலையில் தொடர்பா? - திமுக மாநில பெண் நிர்வாகி மறுப்பு

DMK state wing lady leader denies connection in Nellai ex mayor uma Maheswari murder case

by Nagaraj, Jul 26, 2019, 15:13 PM IST

நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவருடைய கணவர் மற்றும் பணிப் பெண் ஆகிய 3 பேர் படுகொலையில் தமக்கு எந்த தொடர்பும் இல்லை என திமுகவின் ஆதி திராவிட நலக் குழு மாநில துணைச் செயலாளரான சீனியம்மாள் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக 1996-ல் பதவி வகித்த உமா மகேஸ்வரி தற்போது நெல்லை மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளராக இருந்து வந்தார். கடந்த 23-ந் தேதி உமாமகேஸ்வரியும் அவருடைய கணவர் முருகசங்கரன் மற்றும் வீட்டு வேலை பார்த்த பணிப் பெண் மாரியம்மாள் ஆகிய 3 பேரும் பட்டப்பகலில் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர்.

நெல்லை ரெட்டியார்பட்டி சாலையில் உள்ள உமாமகேஸ்வரியின் பங்களா வீட்டில் நடந்த இந்த படுகொலை சம்பவம் நெல்லையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உமா மகேஸ்வரி கொலை நடந்தது எதற்காக? கொலையாளிகள் யார்? என்பதில் இன்னும் துப்பு துலங்கவில்லை.

இந்தக் கொலை தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசாரும் பல கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். இதில் சிலர் மீது சந்தேகம் வந்து விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து விசாரித்து வருகின்றனர்.

இந்தக் கொலையில் நெல்லையைச் சேர்ந்த திமுக பிரமுகரான சீனியம்மாள் என்பவருக்கும் தொடர்பிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. திமுகவில் மாநில ஆதிதிராவிட நலக் குழுவின் துணைச் செயலாளராக இருக்கும் சீனியம்மாள் மதுரையில் மகள் வீட்டில் வசித்து வந்தார். இதனால் நேற்று மதுரை வந்த நெல்லை போலீசார் சீனியம்மாளிடம் அதிரடியாக விசாரணை மேற்கொண்டனர்.

திமுகவில் கட்சி தலைமைக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் உமா மகேஸ்வரி.கடந்த 2016-ல் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட சீட் வாங்கி தருவதாகக் கூறி சீனியம்மாளிடம், உமா மகேசுவரி பணம் பெற்றார் எனக் கூறப்படுகிறது. ஆனால் அந்தத் தேர்தலில் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. இதனால் பணத்தை திருப்பிக் கேட்டதில் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்பட்டது.

இதனால் கூலிப்படையை ஏவி, சீனியம்மாள் இந்தக் கொலைகளை செய்ய தூண்டியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் உமாமகேஸ்வரி கொலையில் தமக்கு எவ்வித தொடர்பும் இல்லை என சீனியம்மாள் மறுத்துள்ளார்.இது குறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை தொடர்பாக திருநெல்வேலி தனிப்படை காவல்துறையினர் விசாரணை செய்தனர். எனக்கு உடல்நலம் சரி இல்லாத காரணத்தால் கடந்த ஒரு ஆண்டாக மதுரையில் உள்ள எனது மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றேன். 

மாநில நிர்வாகியாக உள்ள நான், மாவட்ட நிர்வாகியாக இருந்த உமாமகேஸ்வரியிடம் கட்சி பதவிக்காகவோ அல்லது தேர்தலில் சீட் வாங்கி தரவேண்டும் என்றோ அவரிடம் பணம் கொடுத்து ஏமாறவில்லை.  உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை செய்யப்பட்டதை டி.வி செய்தியை பார்த்து தான் தெரிந்துகொண்டேன்.

போலீசார் சந்தேகத்தின் பேரில் 100 பேரிடம் விசாரித்தால் அவர்கள் அனைவரும் குற்றவாளி கிடையாது. என் மீது குற்றஞ்சாட்டி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்த சிலர் நினைக்கின்றனர் என்று சீனியம்மாள் தெரிவித்துள்ளார்.

உமாமகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் படுகொலை நடந்து 3 நாட்கள் கடந்த பின்னரும், இன்னும் துப்பு துலங்காததால் போலீசார் திணறி வருகின்றனர்.

நெல்லை முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி படுகொலை ; கணவர், பணிப்பெண்ணையும் வெட்டிச் சாய்த்த மர்ம கும்பல்

You'r reading நெல்லை மேயர் உமா மகேஸ்வரி கொலையில் தொடர்பா? - திமுக மாநில பெண் நிர்வாகி மறுப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை