முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலை மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்

by Nagaraj, Aug 7, 2019, 20:12 PM IST
Share Tweet Whatsapp

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவராகத் திகழ்ந்த கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி முரசொலி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை மேற்கு வங்க முதல்வர்ர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்.

கடந்த ஆண்டு இதே நாளில் மறைந்த கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று காலை மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து அமைதிப் பேரணி நடைபெற்றது. பின்னர் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் / தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


பின்னர் இன்று மாலை முரசொலி நாளிதழ் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்.இந்த விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.


முரசொலி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின்
சிலை வெண்கலத்தால் அமைக்கப்பட்டுள்ளது.அமர்ந்த நிலையில் உள்ள கருணாநிதியின் சிலை, 6.3 அடி அகலம், 6.5 அடி உயரம் என்கிற அளவில் வெண்கல செய்யப்பட்டுள்ளது.


சிலையின் மேல்பகுதி தொடங்கி பீடம் வரை 30 டன் எடை கொண்டிருக்கிறது. அதில் 16 டன் எடையும் 6 அடி உயரமும் கொண்ட ஒரே கறுப்பு கிரானைட் கல்லால் முப்பரிமாண தோற்றத்தில் பீடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. விஸ்கான் ஒயிட் என்ற கிரானைட் கற்களை கொண்டு அலங்கார வடிவமைப்புகள் செய்யப்பட்டுள்ளன.
10 அடி நீளம் , 10 அடி அகலம்,9 அடி உயரம் என்ற அளவில் பீடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான கல் மைசூர் அருகேயுள்ள சாம்ராஜ் நகரில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தச் சிலையை திருவண்ணாமலையில் உள்ள அருணை கிரானைட் கம்பெனி வடிவமைத்துள்ளது.

இந்தச் சிலையைத் திறந்து வைத்த பின், மெரினா கடற்கரையில் கருணாநிதி நினைவிடத்திற்குச் சென்ற மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், நாராயணசாமி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.இதன் பின்னர் ராயப்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று மம்தா பானர்ஜி உரையாற்றினார்.


Leave a reply