தகவல் தொழில்நுட்பத் துறையை கூடுதலாக பெற்றுள்ள அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார். அப்போது ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிலவரம் பற்றி இருவரும் விவாதித்ததாக தெரிகிறது.
தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் மணிகண்டனின் பதவி நேற்றிரவு திடீரென பறிக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பரிந்துரையின் பேரில் அவரை அமைச்சர் பதவியிலிருந்து விடுவிப்பதாகவும், மணிகண்டன் வகித்து வந்த இலாகாவை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கவனிப்பார் என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் அறிவிப்பில் கூறப்பட்டது.
முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் முதல்முறையாக அமைச்சர் ஒருவரின் தவியை அதிரடியாக பறித்துள்ளார். ஏற்கனவே ஓசூரைச் சேர்ந்த பாலகிருஷ்ண ரெட்டி, குற்ற வழக்கில் தண்டனை பெற்றதால் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் இப்போது அமைச்சர் மணிகண்டன் பதவியிலிருந்து நீக்கம் என முடிவு செய்து உள்ளனர்.
இந்நிலையில், முதல்வர் மீதும், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மீதும் கடும் அதிருப்தியில் உள்ள மணிகண்டனிடம் நிருபர்கள் கேட்ட போது, ‘‘முதலமைச்சரை சந்திக்கும் திட்டம் இல்லை’’ என்று மட்டும் பதிலளித்தார். அதிருப்தியில் உள்ள அவர் வாய் திறந்தால், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் குறித்து மேலும் பல தகவல்கள் வெளியாகலாம் என்று தெரிகிறது. ஏற்கனவே கேபிள் டிவி கார்ப்பரேஷன் தலைவராக இருந்து கொண்டு, 2 லட்சம் இணைப்புகள் கொண்ட அக்ஷயா கேபிள் டிவியை உடுமலை ராதாகிருஷ்ணன் நடத்துகிறார் என்றும், இது முறையற்றது என்றும் கூறியிருக்கிறார்.
இந்த சூழ்நிலையில், கூடுதலாக தகவல் தொழில்நுட்பத் துறையை பெற்றுள்ள அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று காலையில் முதல்வர் பழனிச்சாமியை மரியாதை நிமித்தம் சந்தித்தார். அப்போது அவர்கள் இருவரும் மணிகண்டனின் அடுத்த கட்ட நடவடிக்கை மற்றும் அவர் நீக்கப்பட்டதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்சியில் ஏற்படும் சலசலப்புகள் பற்றியும் விவாதித்துள்ளனர்.
எனவே, ராமநாதபுரம் மாவட்ட அதிமுக கட்சியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்படலாம் எனத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்ட அதிமுகவில் முன்னாள் எம்.பி. அன்வர்ராஜாவின் கை ஓங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலை ; மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்