தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அந்த துறை, அமைச்சர் உதயகுமாரிடம் கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணத்திற்குப் பின் அதிமுகவில் பல குழப்பங்கள் ஏற்பட்டன. தற்காலிக முதலமைச்சராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து பதவியை சசிகலா பறித்தார். ஓ.பி.எஸ். அவருக்கு பயந்து ராஜினாமா செய்து விட்டு, அதன்பிறகு திடீரென துணிச்சலுடன் தர்மயுத்தம் நடத்தினார். இதற்கிடையே, சசிகலா சிறைக்கு போக வேண்டிய கட்டாயம் ஏற்படவே கூவத்தூரில் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக தேர்வு செய்து விட்டு சென்றார்.
இதன்படி, கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதியன்று எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவரது ஆட்சியை ஊழல் ஆட்சி என்று விமர்சித்த ஓ.பன்னீர்செல்வம் திடீரென எடப்பாடியிடம் சமாதானம் ஆகி துணை முதல்வர் பதவியை பெற்றார். அதன்பின், எடப்பாடி அணியும், ஓ.பி.எஸ். அணியும் வெளியே தெரியாமல் குஸ்தி போட்டு வருகின்றன. இதனால், எந்த மந்திரி என்ன ஊழல் செய்தாலும், தப்புத்தப்பாக பேசினாலும், அடாவடியில் ஈடுபட்டாலும் எடப்பாடியாரால் யார் மீதும் கை வைக்க முடியவில்லை. ஏற்கனவே பாஜகவுக்கு எடப்பாடியும், ஓ.பி.எஸ்சும் போட்டி போட்டு அடிமையாக இருப்பதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில், மந்திரிகளும் இஷ்டம் போல் செயல்பட்டதால், அதிமுகவுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் மரண அடி கிடைத்தது. நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் தொகுதியில் தற்போது தேர்தல் முடிந்து 9ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உ்ள்ளது.
இந்த சூழ்நிலையில், திடீரென முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பரிந்துரையின் பேரில், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டனை கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடியாக நீக்கம் செய்துள்ளார். தகவல் தொழில்நுட்பத் துறை தற்போது வருவாய்த் துறை அமைச்சராக உள்ள ஆர்.பி.உதயகுமாரிடம் கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளதாகவும் கவர்னர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மணிகண்டனை நீக்கியதற்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் நடந்த மிகப் பெரிய முறைகேடுதான் காரணம் என்றும், அது விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்றும் தலைமைச் செயலக வட்டாரங்களில் பேசப்படுகிறது. அது என்ன முறைகேடு? முதல்வருக்கே தெரியாமல் நடந்த ஊழலா? அல்லது மத்திய அரசின் உளவுத் துறை ஏதேனும் தகவல் கொடுத்து, அதன் நிர்ப்பந்தத்தின் பேரில் மணிகண்டன் நீக்கப்பட்டாரா என்று அதிமுகவில் பரபரப்பான விவாதம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் நிர்ப்பந்தம் என்றால், அடுத்தடுத்து மணிகண்டன் மீது நடவடிக்கைகள் பாயலாம் என்றும் பேசப்படுகிறது.