விமானி அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது மத்திய அரசு விரைவில் அறிவிப்பு

IAF pilot wing commander Abhinandan is likely to get vir chakra award

by Nagaraj, Aug 8, 2019, 13:04 PM IST

பாகிஸ்தான் எல்லைக்குள் தைரியமாக பறந்து, அத்துமீறிய அந்நாட்டு விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் பாலகோட்டில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய மற்ற விமானப்படை விமானிகளுக்கு வாயு சேனா பதக்கமும் வழங்கி கவுரவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றும் இது பற்றிய அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் தெரிகிறது.


காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14-ந்தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இதற்கு காரணமான தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம் மீது பிப்.,27-ல் இந்திய விமானப்படை சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறின. அப்படி இந்திய எல்லைக்குள் அத்துமீற முயன்ற பாகிஸ்தானின் எப்-16 விமானம் ஒன்றை துரத்தி சென்று சுட்டு வீழ்த்தினார் விங் கமாண்டர் அபிநந்தன்.


தான் சென்ற மிக் 21 ரக விமானம் விழுந்து நொறுங்குவதற்கு சில விநாடிகளுக்கு முன், பாகிஸ்தானின் எப்-16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தினார் அபிநந்தன். அதி நவீன ரகமான எப்-16 விமானத்தை, மிக்-21 ரக விமானம் மூலம் சுட்டு வீழ்த்தியது இதுவே முதல் முறையாகும். எப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்திய சில நொடிகளில் அபிநந்தன் சென்ற விமானம் நொறுங்கி விழுந்தது. விமானத்திலிருந்து குதித்து பாகிஸ்தான் எல்லைக்குள் உயிர் தப்பிய அபிநந்தனை சிறை பிடித்தது பாகிஸ்தான். அபிநந்தனை விடுவிக்க இந்தியா கொடுத்த தொடர் அழுத்தம் காரணமாக 60 மணி நேரத்தில் அவரை திருப்பி அனுப்பியது பாகிஸ்தான்.

 

பாகிஸ்தானில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, அபிநந்தனிடம் நடத்தப்பட்ட பல கட்ட சோதனைகளுக்கு பிறகே, அவர் மீண்டும் விமானப்படையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அபிநந்தனின் துணிச்சலைப் பாராட்டி, அவருக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட உள்ளது. இந்திய ராணுவத்தில் பரம் வீர் சக்ரா, மகா வீர் சக்ரா ஆகிய விருதுகளுக்கு பிறகு போர்க்கால துணிச்சலான செயல்பாடுகளுக்காக 3-வது உயரிய விருது வீர் சக்ரா விருதாகும்.


இதே போல் பாலகோட்டில் தாக்குதல் நடத்திய விமானப் படையின் வீரர்களுக்கும் வாயுசேனா பதக்கம் வழங்கப்பட உள்ளது. சுற்றியுள்ள எந்த பகுதிகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் தீவிரவாதிகளின் முகாம் மீது துல்லியமாக குண்டுகளை வீசி தாக்குதலை வெற்றிகரமாக முடித்ததற்காக அவர்களும் கவுரவிக்கப்படுகின்றனர். இந்த விருதுகள் வழங்குவது பற்றிய மத்திய அரசின் அறிவிப்பு வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்திற்கு முன்பே வெளியாகும் என கூறப்படுகிறது.

காஷ்மீரில் முழு அமைதி; அஜித்தோவல் நேரில் ஆய்வு

You'r reading விமானி அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது மத்திய அரசு விரைவில் அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை