உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோப்பையை பாகிஸ்தான் வெல்ல வேண்டும் என்பதற்காக இந்தியாவை சீண்டிப் பார்க்கும் வகையில் அந்நாட்டு தொலைக்காட்சியில் வெளியாகி வரும் விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் வசம் சிக்கிய போது, அவர் டீ குடிக்கும் காட்சியை வைத்து கிண்டலாகவும், மலிவாகவும் வெளியிடப்பட்டுள்ள இந்த விளம்பரம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமின்றி அனைவரையும் கொந்தளிக்கச் செய்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவிடம் எப்போதும் மண்ணைக் கவ்வுவதுதான் பாகிஸ்தானுக்கு வாடிக்கை. இந்தியாவுக்கு எதிராக ஒரு போட்டியில் கூட பாகிஸ்தான் வென்றதில்லை. போர் ஆனாலும் சரி, கிரிக்கெட் விளையாட்டு ஆனாலும் சரி, இந்தியாவிடம் அடி மேல் அடி வாங்கும் பாகிஸ்தான் இன்னும் திருந்தியதாகத் தெரியவில்லை. இந்நிலையில் இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டித் தொடரிலும், இந்தியாவை சீண்டிப் பார்க்கும் வகையில் தரம் தாழ்ந்த வகையில் ஒரு விளம்பரம் அந்நாட்டு டிவிக்களில் வெளியாகியுள்ளது
இந்தத் தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோத உள்ள பரபரப்பான போட்டி வரும் 16-ந் தேதி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை வெல்ல வேண்டும் என்பதற்காக இந்திய விமானி அபிநந்தனை சித்தரித்து ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் வசம் சிக்கிய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் போல முறுக்கு மீசை உடைய ஒருவரை நடிக்க வைத்து கேலி செய்யும் விதமாக டயலாக் இடம் பெற்றுள்ளது.
பிப்ரவரி 27-ந் தேதி பாகிஸ்தான் போர் விமானத்தை துரத்திச் சென்று வீழ்த்திய அபிநந்தன், பாகிஸ் தான் எல்லையில் நுழைந்து விட்டார். அவர் தங்கள் வசம் சிக்கிக்கொண்டதை உறுதிப்படுத்தும் விதமாக பாகிஸ்தான் ராணுவம் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவில் அபிநந்தன் டீ குடித்துக் கொண்டே பேசுவார். அப்போது, ராணுவ விமானம் குறித்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் எழுப்பிய கேள்விகளுக்கு, மன்னிக்கவும். அதுகுறித்து நான் கூற முடியாது என்று பதிலளிப்பார். பின்னர், டீ எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, நன்றாக இருக்கிறது என்று பதிலளிப்பார்.
இந்த வீடியோவை அடிப்படையாக வைத்து இந்தியா-பாகிஸ்தான் இடையை நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டியை விளம்பரப்படுத்தும் விதமாக, பாகிஸ்தான் டிவிக்களில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவே தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் சீருடை போன்ற உடையணிந்து, அபிநந்தன் போல முறுக்கு மீசை உடைய ஒருவர் டீ குடித்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஏதோ கேட்டது போலவும், அதற்கு மன்னிக்கவும், அது பற்றி என்னால் எதுவும் சொல்ல முடியாது என்று அபிநந்தன் தோற்றத்தில் உள்ளவர் ஆங்கிலத்தில் திரும்பத் திரும்ப கூறுகிறார்.
பின்னர், டீ எப்படி இருக்கிறது என்று கேட்க டீ நன்றாக இருக்கிறது என்று கூறிவிட்டு டீ கப்புடன் செல்கிறார். அப்போது, பனியனை இழுத்தபடி கப்பை வைத்துவிட்டு செல்லுமாறு கூறி பிடுங்கிக் கொள்கிறார். அத்துடன் கிரிக்கெட் விளம்பரம் வெளியாகிறது.
இப்படி அபிநந்தனை கேலி செய்யும் விதமாக எடுக்கப்பட்ட இந்த விளம்பரம் பெறும் சர்ச்சையை ஏற்பட்டுள்ளது.
இந்த விளம்பரம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் இந்த செயல் இழிவானது என்றும் சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், சிலர் அந்த டீ கப்பையாவது, பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.உங்களுக்கு உலகக் கோப்பையெல்லாம் கிடைக்கப் போவதில்லை என்ற ரீதியில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.