காஷ்மீருக்கு அனைத்துக் கட்சி குழுவை அனுப்ப வேண்டும் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்

ஜம்மு -காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் புதிய சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், அம்மாநில மக்களின் கருத்தை கேட்டறிய அனைத்துக் கட்சிகளின் குழுவை உடனே அனுப்ப வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்தும், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவையும் மத்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை நடைபெற்றது.


இந்தக் கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் மற்றும் தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட 36 மசோதாக்களில், பெரும்பான்மை மசோதாக்கள் ஜனநாயகத்துக்கு எதிரானவை. அவற்றில் சில, ஆர்.எஸ்.எஸ் தழுவியிருக்கும் அடிப்படை நோக்கத்திற்கானவை.

72 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுடன் இணைந்த காஷ்மீர் மாநிலத்தையும், 70 வருடங்களுக்கு முன்பு அந்த மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 -வது அரசியல் சட்டப் பிரிவையும் ரத்து செய்திருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு. அத்துடன் காஷ்மீர், லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களை உருவாக்கி இருக்கிறார்கள்.

காஷ்மீர் மாநிலத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்றத்தைத் திட்டமிட்டுக் கலைத்து, ஆளுநர் ஆட்சியைப் புகுத்தி, ஊருக்கு ஊர் தெருவுக்குத் தெரு இராணுவத்தை நிறுத்தி, ஊரடங்குச் சட்டம் போட்டு, அரசியல் கட்சித் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்துக் கைதிகளாக்கி, தகவல் தொடர்பு சாதனங்களை முடக்கி, காஷ்மீரத்தையே சிறைக் கூடாரமாக்கி, சர்வாதிகாரமாக இந்த திடீர் மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள்.

நியாயப்படுத்த முடியாத - பா.ஜ.கவின் அடிப்படைவாத எண்ணத்திற்கும், அதை நிறைவேற்ற இந்திய மக்கள் வழங்கிய பெரும்பான்மைத் தீர்ப்பைத் தவறான முறையில் பயன்படுத்துவதற்கும், அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

காஷ்மீரத்து மக்களுக்கு, இந்தியப் பிரதமர் - இந்திய அரசியல் நிர்ணய சபை - இந்தியப் பாராளுமன்றம் கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு, மத்திய பா.ஜ.க. அரசு தனது கட்சியின் மதரீதியான சிந்தனையை ஈடேற்றிக் கொள்ள எத்தனிப்பது அதிர்ச்சி அளித்திடக் கூடியதாகும் எனவும், அது பாரதிய ஜனதா கட்சி நம்பகத்தன்மையை முற்றிலும் இழந்துவிட்டது எனவும் இக்கூட்டம் பதிவு செய்திட விரும்புகிறது.


ஆளுநரை முதல்வராக பாவித்து - ஆளுநர் ஆட்சியை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு சமமாகக் கற்பனை செய்து கொண்டு - இந்த சர்வாதிகார முடிவினை எடுத்துள்ள மத்திய அரசு அரசியல் சட்டம் வரையறுத்துக் கொடுத்துள்ள கூட்டாட்சித் தத்துவத்தையும் அவமதித்துள்ளது.

“ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தின் பரிந்துரையைப் பெற வேண்டும்” என்ற அரசியல் சட்டப் பிரிவு 370(3)-யையும், ஒரு மாநிலத்தைப் பிரிக்கும் மசோதாவினை, அந்த மாநில சட்டமன்றம் பரிந்துரைத்த பிறகே, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசியல் சட்டப் பிரிவு 3-ன் ஆகிய இரு பிரிவுகளையும், மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு அப்பட்டமாக மீறியிருக்கிறது. இன்று காஷ்மீருக்கு நேர்ந்தது, நாளை எந்த மாநிலத்திற்கும் நேரும் என்ற அபாயமும் தொக்கி நிற்கிறது. இந்த சட்டத்தை முன் உதாரணமாகக் கொண்டு, அந்த ஆபத்து எதிர்காலத்தில் எந்த ஒரு மாநிலத்திற்கும் நேரவே நேராது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. அந்தவகையில் இது மிக மோசமான முன்னுதாரணமாக, அரசமைப்புச் சட்டத்தின் மாறாத ரணமாக அமைந்துவிடும்.

 


காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கேட்காமல், அந்த மக்களின் விருப்பத்தை அறியாமல்- பாராளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நேரத்தில் ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக்கூட கூட்டாமல், இப்படியொரு ஒருதலைபட்ச முடிவினை அவசரகதியில் எடுத்திருப்பது, விரும்பத் தகாத பின்விளைவுகளை ஏற்படுத்திடக் கூடியதாகும்.


கைது செய்யப்பட்டுள்ள காஷ்மீரின் முன்னாள் முதல்வர்களையும் ஏனையோரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்; இந்தியாவின் பாதுகாப்புக்கு எந்த விதக் குந்தகமும் இன்றி, இராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும்; காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றமும், அரசும் அமையும் வரை, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தையும், அதன் செயல்பாட்டினையும், மத்திய பா.ஜ.க. அரசு நிறுத்தி வைக்க வேண்டும் . மேலும் காஷ்மீரின் உண்மை நிலையை அறிந்து கொள்ளமுடியாத இருள் சூழ்ந்த ஒரு நெருக்கடி நிலவுகிறது.

ஆகவே மத்திய அரசு உடனடியாக பாராளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய ஒரு அனைத்துக் கட்சிக் குழுவினை காஷ்மீருக்கு அனுப்பி, அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடி உண்மை நிலையினை நாட்டு மக்களுக்கு தெரிவித்திட ஏதுவானதொரு ஏற்பாட்டினைச் செய்திட முன்வரவேண்டும் என்றும் அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement
More Tamilnadu News
sasikala-cannot-be-released-early-prison-director-said
சசிகலாவுக்கு நன்னடத்தை விதிகள் பொருந்தாது.. கர்நாடக சிறை அதிகாரி தகவல்
vikkiravandi-nanguneri-byelection-voter-turnout-percentage
விக்கிரவாண்டி, நாங்குநேரியில் ஒரு மணி வாக்குப்பதிவு நிலவரம்..
rajinikanth-gives-houses-to-gaja-cyclone-affected-people
கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு இலவச வீடு.. சாவி கொடுத்தார் ரஜினி
honourary-doctorate-awarded-to-tamilnadu-chief-minister-edappadi-palanichamy
எடப்பாடி பழனிச்சாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம்.. எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் வழங்கியது
vikkiravandi-nanguneri-by-poll-tommorow
விக்கிரவாண்டி, நாங்குநேரியில் நாளை வாக்குப்பதிவு.. காலை 7 மணிக்கு தொடக்கம்
tiruvannamalai-collector-kandasamy-warns-panchayat-officers-through-voice-messages
நாளைதான் உங்களுக்கு கடைசி.. அதிகாரிகளை எச்சரிக்கும் கலெக்டரின் கோபப் பேச்சு.. வாட்ஸ் அப்பில் வைரலான ஆடியோ..
if-dr-ramadas-stalins-challenge-again
நேர்மையான அரசியல்வாதியாக டாக்டர் ராமதாஸ் இருந்தால்.. ஸ்டாலின் மீண்டும் சவால்
murasoli-office-is-situated-in-panchami-land-dr-ramadoss-accussed-again
முரசொலி இடம் பஞ்சமி நிலமா? ஸ்டாலின் - ராமதாஸ் மோதல்..
bjp-request-tamilnadu-government-to-arrest-karappan
கிருஷ்ணரை இழிவுபடுத்திய காரப்பனுக்கு பாஜக கண்டனம்.. கைது செய்ய நாராயணன் வலியுறுத்தல்
i-have-never-misrepresented-muslims-rajendrabalaji-explained
முஸ்லிம்களிடம் நான் தவறாக பேசவே இல்லை.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம்
Tag Clouds