எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும் தெரியுமா?

When do you drink water

by SAM ASIR, Aug 10, 2019, 19:05 PM IST

மனித உடலில் 60 விழுக்காடு நீரால் ஆனது. உடல் செல்கள் அனைத்தும் நீரைக் கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளன. நாம் உயிர் வாழ்வதற்கு நீர் அவசியம். உடலின் மூட்டுகளில் நீர் உயவுப் பொருளாக பயன்படுகிறது. உடலெங்கும் உயிர்வளியான ஆக்ஸிஜனை எடுத்துச் செல்கிறது. உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது. உணவு செரிப்பதில் உதவுகிறது. உடலிலிருந்து நச்சுப்பொருள்களை அகற்றுகிறது.


நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு தினமும் குறைந்தது இரண்டு லிட்டர் நீர் அருந்தவேண்டும். எந்தெந்த வேளைகளில் நீர் அருந்துவது அதிக பயனளிக்கும் என்று அறிந்து கொள்வது இன்னும் நன்மை பயக்கும்.


அதிகாலையில்:
காலையில் எழுந்ததும் ஒரு குவளை (தம்ளர்) நீர் அருந்தலாம். இது உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றும். உடலுக்கு ஆற்றலை அளிக்கும். சாதாரண தண்ணீர் அல்லது வெதுவெதுப்பான நீர் பருகலாம். செயற்கையாய் குளிர வைக்கப்பட்ட (ஐஸ் வாட்டர்) நீரை தவிர்க்கவும்.


சாப்பிடும் முன்:
சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் அருந்துதல் நலம். இதனால் மிக அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கலாம். உணவுவேளைக்கு அரைமணி நேரம் முன்பு ஒரு குவளை நீர் அருந்தினால் சுவை மொட்டுகள் உசுப்பப்படும். வயிற்றின் உள்புறச் சுவற்றை ஈரப்பதமாக்கும். முன்னர் உண்ட உணவு மற்றும் அருந்திய பானங்களின் சுவையை நீக்கும்.


பசிக்கும்போது:
சில நேரங்களில் தாகமாயிருக்கும்போது பசியெடுப்பதாக உணருவோம். இரண்டு உணவுவேளைகளுக்கு இடையே பசிப்பதாக உணர்ந்தால் ஒரு பெரிய குவளை நீர் அருந்தலாம். உடலில் நீர்ச்சத்து குறைந்ததால் பசி உணர்வு தோன்றியிருப்பின் நீர் அருந்தியதும் மறைந்து விடும்.


உடற்பயிற்சிக்கு முன்பும் பின்பும்:
உடற்பயிற்சி செய்வதற்கு முன்னரும் செய்து முடித்த பின்னரும் இரண்டு அல்லது மூன்று குவளை நீர் அருந்தலாம். உடல் நீர்ச்சத்து இழப்பதை இது தவிர்க்கும். உடலின் மொத்த திரவ சமநிலையை பேண உதவும். ஆனால், ஒரே நேரத்தில் அதிக நீர் அருந்துவதை தவிர்க்கவும். இது வயிற்று பிடிப்பு ஏற்படாமல் தடுக்கும்.


நோயுற்றிருக்கும்போது:
உடல் நலமில்லாத நேரத்தில் அதிகமாக நீர் பருக வேண்டும். இதனால் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து கிடைப்பதுடன் நச்சுக்கள் அகற்றப்பட்டு விரைவில் நலம் பெற முடியும்.


களைப்பாயிருக்கும்போது:
களைப்பாக உணர்ந்தால் ஒரு குவளை நீர் அருந்தலாம். உடலில் நீர்ச்சத்து குறைவதன் அறிகுறியே அசதி. ஓய்வெடுக்க இயலாத வேளையில் நீர் அருந்தினால் மூளைக்கு சற்று புத்துணர்ச்சி கிடைக்கும்.

You'r reading எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும் தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை