குற்றால அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. சாரல் மழையும், இதமான வெப்ப நிலையும் காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூனில் தொடங்கி ஆகஸ்ட் வரை சீசன் இருக்கும். இந்த நாட்களில் குற்றாலத்தைச் சுற்றியுள்ள தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட இடங்களிலும் சாரல் மழையும் இதமான தென்றல் காற்றும் காணப்படும். இந்த ஆண்டு ஜூன் கடைசியில் சீசன் தொடங்கினாலும், சில நாட்களில் தண்ணீர் வரத்து குறைந்ததால், அருவிகளில் தண்ணீர் விழவில்லை. இதன்பின், கடந்த 7ம் தேதி முதல் குற்றாலம் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது.
இந்நிலையில், சுதந்திர தின விடுமுறை நாளான நேற்று குற்றாலத்தில்் மக்கள் குவிந்தனர். பேரரவியில் வளைவைத் தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். மாலையில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அதில் சுற்றுலா பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
அதே சமயம், ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் இன்றும் அருவிகளில் நன்றாக தண்ணீர் விழுகிறது. இன்று வேலை நாளாக இருந்தும், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் மக்கள் கூட்டமாக வந்து குளித்து மகிழ்ந்தனர். குற்றாலத்தில் சாரல் மழையும், இதமான தட்பவெட்ப நிலையும் காணப்படுகிறது.