குற்றாலம் அருவிகளில் மூன்றாவது நாளாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், இன்று காலையில் மக்கள் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையின் தொடர்ச்சியாக குற்றாலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், தற்போது குற்றாலத்தில் சீசன் ரம்மியமாக உள்ளது.
கடந்த இரண்டு, மூன்று தினங்களாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. அவ்வப்போது அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால், சுற்றுலா பயணிகள், அருவிகளில் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இந்த நிலையில் நேற்றும் தொடர்ந்து மழை பெய்ததால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டியும், ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. இதில் குளிப்பது ஆபத்து என்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று மூன்றாவது நாளாக அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், இன்று காலையில் அருவிப் பகுதிகளுக்கு மக்களை செல்ல விடாமல் போலீசார் தடுப்பு வைத்திருந்தனர். இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.