தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என்று மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளதால், கோவைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு கமாண்டோ படை வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். பிரபல ஷாப்பிங் மாலில் கமாண்டோ படையின் வெடிகுண்டு தடுப்பு பிரிவு வீரர்கள் நீண்ட நேரமாக சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்துக்குள் லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதிகள் 6 பேர் ஊடுருவியிருப்பதாக தமிழக டிஜிபிக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இலங்கை வழியாக இந்த பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும், குண்டு வெடிப்பு போன்ற நாச வேலைகளில் ஈடுபடலாம் என்றும் உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு, ரயில், விமான நிலையங்களில் பாதுகாப்பும், கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே பயங்கரவாதிகள் கோவையில் தாக்குதல் நடத்த குறிவைத்துள்ளதாகவும், அங்கு பதுங்கியுள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கோவைக்கு ரெட் அலர்ட் விடப்பட்டு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் தமிழக அதிரடிப் படையின் கமாண்டோ படை வீரர்கள் வரவழைக்கப்பட்டு நகரின் முக்கியப் பகுதிகளில் ரோந்து சுற்றி வருகின்றனர். மேலும் கோவை முழுவதும் 2000 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கோவையில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில், சந்தேகத்தின் பேரில் அதிரடிப்படை வீரர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டு தடுப்பு பிரிவு படையினருடன் பல மணி நேரம் அந்த மாலில் நடத்தப்பட்ட சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் கோவை நகரின் முக்கிய வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள், ரயில், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அதிரடிப்படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.