காவிரியில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சற்று அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் 117 அடியை எட்டியுள்ளது. இதனால் அணை நிரம்ப இன்னும் 3 அடியே பாக்கியுள்ளது. கர்நாடகாவில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருவதால் நீர் வரத்து அதிகரித்து விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில், இம்மாதம் முதல் வாரத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் காவிரியில் அதிக நீர்வரத்து காரணமாக, மேட்டூர் அணை நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து ஒரே வாரத்தில் 110 அடியை எட்டியது. இதனால் காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையும் கடந்த வாரம் திறக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 10 நாட்களாக கர்நாடகாவில் மழை ஒய்ந்து, காவிரியில் நீர்வரத்தும் படிப்படியாக குறைந்தது .இதனால் வேகமாக மேட்டூர் அணை நிரம்பி விடும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில் மிக மெதுவாகவே உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 14, 14 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில் இன்று 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 116.93 அடியாகவும், நீர்இருப்பு 88.657 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்காக10,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தற்போது கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருவதால் தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு 17 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை அடுத்த சில தினங்களில் நிரம்பும் வாய்ப்பு உள்ளது. இதனால் அணைக்கு வரும் நீர் குறித்து அதிகாரிகள் கூடுதலாக கண்காணித்து வருகின்றனர்.
மேட்டூர் அணை நீர்மட்டம் 111.81 அடி ; நீர்வரத்து மேலும் சரிவு