திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அக்கட்சியின் பொதுக்குழு அடுத்த மாதம் 6ம் தேதி சென்னையில் கூடுகிறது.
திமுக தலைவராக நீண்ட காலம் பணியாற்றி, தேர்தலில் தோல்வியுற்ற காலங்களிலும் கட்சியை உயிரோட்டமாக வைத்திருந்தவர் கருணாநிதி. கடந்த ஆண்டு ஆக.7ம் தேதி அவர் மரணமடைந்தார். இதையடுத்து, ஆகஸ்ட் 28ம் தேதியன்று திமுக பொதுக் குழு கூடி, கட்சியின் புதிய தலைவராக மு.க.ஸ்டாலினை தேர்வு செய்தது. கருணாநிதி உயிருடன் இருக்கும் போதே, கட்சியின் செயல் தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அதனால், தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்படுவதில் எந்த போட்டியும் ஏற்படவில்லை.
கட்சித் தலைவராக ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டு முடிந்த நிலையில், கட்சியின் பொதுக்குழு அக்டோபர் 6ம் தேதியன்று கூடுகிறது. இது குறித்து. கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், திமுக பொதுக்குழு அக்.6ம் தேதியன்று காலை 10 மணியளவில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும். அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இக்கூட்டத்தில், கட்சியின் ஆக்கப் பணிகள், சட்டத்திட்டத் திருத்தம், தணிக்கைக் குழு அறிக்கை ஆகியவை பற்றி ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில், கட்சியின் விதிமுறைகளில் சில திருத்தங்கள் கொண்டு வருவது மற்றும் உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிப்பதே முக்கியமானவையாக இருக்கும் என்று திமுக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
கருணாநிதி தலைவராக இருக்கும் போது, அறிவாலயத்தில் உள்ள மண்டபத்தில்தான் பொதுக் குழு கூட்டம் நடைபெறும். ஒய்.எம்.சி.ஏ. மைதான அரங்கில் திமுக பொதுக்குழு கூடுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. மேலும், கருணாநிதி தலைவராக உள்ள போது, பொதுக்குழுவில் பல மூத்த உறுப்பினர்கள் துணிவுடன் தலைமைக்கு எதிரான கருத்துக்களை கூட பதிவு செய்வதுண்டு. ஆனால், இப்போது ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் முதல் பொதுக் குழு என்பதால், சுதந்திரமாக பேசுவதற்கு அனுமதி தரப்படுமா என்பதும், முன்கூட்டியே யார்யார் பேச வேண்டும் என்பதை முடிவு செய்து விடுவார்களா என்பதும் இனிமேல்தான் தெரியும் என்று கட்சிநிர்வாகிகள் தெரிவித்தனர்.