பிகில் பட போஸ்டரை கிழித்து இறைச்சி கடைக்காரர்கள் எதிர்ப்பு..

Advertisement

கோவையில் பிகில் படத்தின் போஸ்டரை கிழித்து இறைச்சிக் கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நடிகர் விஜய் நடித்த பிகில் படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் கலந்து கொண்டு பேசும் போது, அதிமுகவை கடுமையாக விமர்சித்தார்.

அதிமுக பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த விவகாரத்தில், பேனர் அச்சடித்தவரையும், லாரி டிரைவரையும் அரெஸ்ட் பண்ணுறீங்க.. ஆனால், பேனர் வைச்சவரை பிடிக்க மாட்டேங்கிறீங்க.. யாரை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ, அங்க உட்கார வைத்தால் எல்லாம் சரியாகி விடும்.. என்று மறைமுகமாக முதலமைச்சர் எடப்பாடியை விஜய் விமர்சித்தார். இதற்கு அதிமுக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி என்று வரிசையாக பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், கோவையில் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்திற்கு இறைச்சிக் கடைக்காரர்கள் சிலர் கோபால் என்பவரின் தலைமையில் வந்தனர். அவர்கள் பிகில் படத்தின் போஸ்டர்களை கையில் வைத்திருந்தனர். அவர்கள் அந்த போஸ்டரை கிழித்து, விஜய்க்கு எதிராக கோஷம் போட்டு விட்டு, கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில், பிகில் போஸ்டரில் விஜய், கறிவெட்டும் மரக்கட்டையின் மீது செருப்பு காலை வைத்திருப்பது போல் உள்ளது. நாங்கள் தினமும் இறைச்சி வெட்டும் கட்டைக்கு பூஜை செய்து வணங்கி விட்டுத்தான் தொழிலை ஆரம்பிப்போம். எனவே, எங்கள் தொழிலை இழிவுபடுத்தும் வகையில் போஸ்டரை நீக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூன் 21ம் தேதியே வெளியாகி விட்டது. ஆடியோவும் வெளியாகி, விஜய் அமெரிக்காவுக்கு சென்று விட்டார். ஆனால், இத்தனை நாட்களுக்குப் பிறகு திடீரென போஸ்டருக்கு இறைச்சிக் கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? இதற்கு பின்னணியில் அதிமுக இருக்குமோ என்று விஜய் ரசிகர்கள் சந்தேகப்படுகின்றனர். எனவே, பிகில் படம் வெளியாகும் போது மீண்டும் சிக்கல் வருமோ என்றும் ரசிகர்கள் பயப்படுகின்றனர்.

Advertisement
/body>