கர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்கள், இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. காங்கிரஸ் 80 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த போதும், வெறும் 37 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட ம.ஜ.த.வுக்கு முதலமைச்சர் பதவியை விட்டு கொடுத்தது.
முதலமைச்சராக குமாரசாமி பதவியேற்றார். அதன்பின், காங்கிரஸ் கட்சியில் இருந்து அவருக்கு தொடர்ந்து நெருக்கடி தரப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில் இருந்த காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த. கட்சியின் எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. வளைத்தது.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 13 பேர், ம.ஜ.த. கட்சியைச் சேர்ந்த 2 பேர் மற்றும் சுயேச்சைகள் என்று 17 பேர் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். இதை ஏற்காத அப்போதைய சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ், அவர்களை கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்தார். மேலும், இடைத்தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்தார். இதன்பின், குமாரசாமி ஆட்சி கவிழ்ந்து, எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது.
இந்நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட அந்த 17 பேரும், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கு நிலுவையில் இருந்தாலும் தடை எதுவும் இல்லாததால் தேர்தல் ஆணையம், 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப் போவதாக அறிவித்தது. ஐகோர்ட்டில் உள்ள ஒரு வழக்கில் உள்ள தடை காரணமாக 2 தொகுதிகளை விட்டுவிட்டு, 15 தொகுதிகளுக்கு அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த சூழலில், இடைத்தேர்தல்களை நிறுத்த உத்தரவிடக் கோரி 17 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், அந்த 17 பேரையும் இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதிப்பது தொடர்பாக சபாநாயகருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். பின்னர், வழக்கு விசாரணையை வரும் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.