49 பிரபலங்கள் மீது தொடர்ந்த தேசத்துரோக வழக்கு வாபஸ்.. மோடிக்கு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

by எஸ். எம். கணபதி, Oct 5, 2019, 13:50 PM IST

மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கை வாபஸ் வாங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு தமிழ்நாடு முஸ்லீம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

நாட்டில் சிறுபான்மை மக்கள் தாக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இயக்குநர் மணிரத்னம் உட்பட 49 பிரபலங்கள் கடிதம் எழுதியிருந்தனர்.

மணிரத்னம், இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட அந்தப் பிரபலங்கள் இணைந்து பிரதமர் மோடிக்கு கடந்த ஜூலை மாதம் பிரதமருக்கு அனுப்பியிருந்த கடிதத்தில், நாட்டில் நடக்கும் கும்பல் படுகொலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.

மேற்கு வங்கம், பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து சிறுபான்மை இன இளைஞர்களை ஜெய் ஸ்ரீராம் என கோஷமிடச் சொல்லித் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதுபோன்ற செயல்களில் இந்து சமய அடிப்படைவாத அமைப்புகளே ஈடுபடுகின்றன என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பிரதமராகிய நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்த கடிதத்தை தொடர்ந்து பீகார் மாநிலத்தில் சதார் காவல்நிலையத்தில் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செயல் வன்மையாக கண்டிக்கதக்கது. மத்திய அரசோ அல்லது பிரதமர் மீதோ விமர்சனங்கள் எழும் போது அதனை தாங்கி கொண்டு, அந்த தவறில் இருந்து தங்களை திருத்தி கொள்ள வேண்டும்.

அதை விட்டுவிட்டு விமர்சனங்கள் செய்வர்கள் மீதும், கேள்வி எழுப்புபவர்கள் மீதும் வழக்கு போட்டு அவர்களை ஓடுக்க நினைப்பது, சர்வாதிகார போக்காக அமைந்து விடும். இந்திய போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் யாரையும் கேள்வி கேட்கும் உரிமை உண்டு. அப்படி கேள்வி எழும்பட்சத்தில் அதில் தவறு இல்லையென்றால் அதற்கு தகுந்த விளக்கத்தை அளிப்பதுதான் நல்ல நடைமுறையாக இருக்கும்.

அதை தவிர்த்து வழக்குகளை கொண்டு அடக்கி விடலாம் என்று நினைப்பது மக்களை மேலும் மேலும் கோபம் அடையத்தான் செய்யும். ஆகவே பழிவாங்கும் நடவடிக்கையை விட்டுவிட்டு, மணிரத்னம் உள்ளிட்டவர்கள் மீது போடப்பட்டுள்ள தேச துரோக வழக்கை திரும்ப பெற தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு முஸ்தபா கூறியுள்ளார்.


Leave a reply