அசுரன் ஒரு அலசல்

Oct 11, 2019, 08:51 AM IST

"

''அடங்க மறு, அத்து மீறு, திமிறி எழு, திருப்பி அடி" என்ற ஒரு அரசியல் வசனம் உண்டு. அதை கதையின் மையமாக வைத்துக் கொண்டு எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலை தழுவி பல மாற்றங்களை செய்து ரத்தமும் சதையுமான ஒரு படத்தை இயக்கியுள்ளார் வெற்றிமாறன். இதுவரை மறைமுகமாக அரசியல் பேசி வந்த வடசென்னையின் சொந்தக்காரர் வெற்றிமாறன், இந்த முறை எந்த ஒளிவு மறைவும் இன்றி தன்னுடைய படம் யாருக்கானது என்று பசுமரத்தாணி போல் அடித்துள்ளார்.

பலர் பேச தயங்கும் பேசுபொருளாக இருக்கும் பஞ்சமி நிலங்களை பற்றிய புரிதலை இந்த படத்தின் மூலம் பொது சனத்திற்கு கொடுத்து இருட்டடிப்பு செய்யப்படும் அரசியலை வெளிச்சத்திற்கு இட்டுச் செல்கிறார். ஆதிக்க சாதி கட்சி நடத்தும் ஒருவருடைய மகனை வைத்தே ஆதிக்கத்திற்கு எதிராக ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து பாயசத்தை போட்டுள்ளார் வெற்றிமாறன். காட்சிகளில் இருக்கும் ஆழமான வசனங்கள் மக்களை சமூக நீதியை நோக்கி யோசிக்க வைக்கின்றன. தெக்கத்தி சீமையில் இருக்கும் வாழ்வியலை அப்படியே உரித்து காண்பிக்கிறது அசுரன் படக்குழு. வேட்டை நாயின் துணையோடு பன்றி வேட்டை செய்யும் மனிதர்களை யதார்த்தத்திலிருந்து சற்றும் மாறாது காட்சிப்படுத்தும் விதம் தேசிய விருதுக்கு எந்த சந்தேகமும் இன்றி பரிந்துரைக்கபட வேண்டியது. அசுரன் காலத்தின் கட்டாயம்.

" நம்மகிட்ட நெலம் இருந்தா எடுத்துக்குவானுவ.. ருவா இருந்தா புடுங்கிக்குவானுவ.. நம்மகிட்ட இருந்து படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது செதம்பரம் " என்ற வசனத்தில் மொத்த நடிப்பையும் உள்நிறுத்தி அசுரனாக உருமாறி நிற்கிறார் சிவசாமி என்று இனி மக்களால் அழைக்கப்பட போகும் தனுஷ். அவருடைய நடிப்பில் எந்த இடத்திலும் தனுஷை காணவே முடியவில்லை. சிவசாமியாகவே வாழ்ந்து சென்று இருக்கிறார். இன்னும் சில காலங்களுக்கு நின்று பேசும் அசுரனின் சிவசாமி கதாபாத்திரம்.

மாரியம்மா, பச்சையம்மா என்று கதையில் வரும் அம்மு, மஞ்சு வாரியர் ஆகிய இரண்டு கதாநாயகிகளும் கதைக்கு வலு சேர்க்கின்றனர். எந்த வகையிலும் ஆணுக்கு பெண் குறைவல்ல என்று சொல்லாமல் சொல்லும் அசுரன் பெண்ணியத்தை வேறொரு பரிமாணத்தில் பேசுகின்றது. வேல்ராஜ் அவர்களின் கேமராவின் வழியே கோவில்பட்டி சுற்று வட்டாரமும் அதன் தேரிகாடுகளும் மண் மணம் மாறாது பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. ராமர் அதை நேர்த்தியாக வெட்டி தைத்துள்ளார். ஜிவியின் இசை வெறி ஏற்றும் என்பதில் ஐயமே இல்லை. அவருடைய பின்ணணி இசையும் பாடல்களும் கதையை மேலும் உயிர்ப்பு ஊட்டுகின்றது.மொத்த படக்குழுவுமே அசுரனுக்காக அசுரத்தனமாய் உழைத்து உள்ளார்கள்.

ஆதிக்க சாதியினரின் மீசையை பிடித்து உலுக்கும் வசனங்களுக்கு ரசிகர்கள் செய்யும் ஆரவாரம் சமத்துவத்தை பொது சனம் விரும்புகின்றது என்றதை மறுமுறை உறுதி செய்கின்றது. வாழ்வியல் பேசும், அடக்குமுறையை எதிர்க்கும் படங்கள் தமிழ் திரையுலகிற்கு புது வண்ணத்தை கொடுக்கின்றன. வானம் நீல நிறமாய் படர்கிறது

--- வாட்சப் தமிழா விவேக்


More Tamilnadu News