எடப்பாடி பழனிச்சாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம்.. எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் வழங்கியது

Honourary doctorate awarded to tamilnadu chief minister Edappadi palanichamy

by எஸ். எம். கணபதி, Oct 21, 2019, 09:44 AM IST

தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகமான எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடைபெறும் போது பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. அரசியலில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா உள்பட பலருக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகமான டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இப்பல்கைக்கழகத்தின் 28-வது பட்டமளிப்பு விழா, சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் நேற்று (அக்.20) மாலை 4 மணிக்கு நடைபெற்றது.

இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. முன்னதாக, அவரது வாழ்க்கை வரலாறு குறித்த வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஏ.சி.சண்முகம் பேசுகையில், உங்களுக்கு(எடப்பாடி பழனிச்சாமி) நானோ, இந்த பல்கலைக்கழகமோ டாக்டர் பட்டம் வழங்கவில்லை. எம்.ஜி.ஆரின் ஆன்மா, ஜெயலலிதாவின் ஆன்மா இந்த டாக்டர் பட்டத்தை வழங்கியிருக்கிறது என்று குறிப்பிட்டார்.

டாக்டர் பட்டம் பெற்ற எடப்பாடி பழனிசாமி பட்டமளிப்பு விழா உரையாற்றினார். அவர் பேசுகையில், பட்டம் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு வாழ்த்துக்கள். மனித சமுதாயத்திற்கு சிறந்த பணியாற்ற மாணவர்கள் உறுதி ஏற்க வேண்டும். மாணவர்களுக்கு கனிவு, பணிவு, துணிவு தேவை. மாணவர்கள் ஏட்டுக்கல்வியுடன், வாழ்க்கை கல்வியையும் கற்க வேண்டும்.

எங்கள் அரசு கடந்த 3 ஆண்டுகளில் 6 சட்டக் கல்லூரிகளை தொடங்கியுள்ளது. மேலும், 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.28,900 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.6,800 கோடி செலவில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. உயர்க் கல்வி சேர்க்கையில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது என்றார்.

இதைத் தொடர்ந்து, டி.ஆர்.டி.ஓ. தலைவர் ஜி.சதீஷ் ரெட்டி, கங்கா மருத்துவமனை தலைவர் ராஜசபாபதி, இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், நடிகையும், பரத நாட்டிய கலைஞருமான ஷோபனா ஆகியோருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, பல்கலைக்கழக நிறுவனத் தலைவர் ஏ.சி.அருண்குமார், வேந்தர் ஆர்.எம்.வாசகம், துணைவேந்தர் கே.மீர்முஸ்தபா ஹூசைன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த பல்கலைக்கழகத்தின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading எடப்பாடி பழனிச்சாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம்.. எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் வழங்கியது Originally posted on The Subeditor Tamil

More Chennai News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை