தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அமைச்சரவைக் கூட்டத்தில் டெல்லியில் அங்கீகாரமற்ற 40 லட்சம் மனைகளுக்கு பட்டா வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்காக நாடாளுமன்றத்தில் சட்டமசோதா கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும், தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
6 மருத்துவக் கல்லூரிகளும் தலா ரூ.325 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். இதில், மத்திய அரசின் பங்காக ரூ.195 கோடியும், தமிழக அரசின் பங்காக ரூ.130 கோடியும் வழங்கப்படும்.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்ததற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அவர் பிரதமர் மோடி மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.