அரசு மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்.. 8 நாள் ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது..

Tamil Nadu Dr strike comes to an end

by Chandru, Nov 1, 2019, 10:42 AM IST

சென்னை, நவ. 1 அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25-ந்தேதி முதல் உண்ணாவிரதம், வேலைநிறுத்த போராட்டம் நடந்து வந்தது. அரசு அழைத்து பேசும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்பதில் உறுதியாக இருந்தனர்.

இதையடுத்து அங்கீகாரம் பெற்ற சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவிட்டது. எனவே போராட்டத்தில் ஈடுபடுவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என அரசு கோரிக்கை விடுத்தது. நேற்று முன்தினம் இரவு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், போராட்டத்தில் ஈடுபடும் டாக்டர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்கள் இடத்துக்கு புதிய டாக்டர்கள் நியமிப்படுவார்கள் என்று கடுமையகா எச்சரித்தார்.

ஆனாலும் டாக்டர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். ஒரு சிலர் போராட்டத்தில் இருந்து விலகி மீண்டும் பணிக்கு திரும்பினாலும், கையெழுத்து போடாமல் பணியில் இருந்தனர்.

நேற்று பிற்பகல் 2 மணி வரை கெடு விதித்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை உள்பட பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த டாக்டர்கள் பணிக்கு திரும்பாமல் இருந்தனர். அரசு மருத்துவர்கள் இன்று காலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும், பணிக்கு திரும்பாத மருத்துவர்கள் மீது டிஸ்மிஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்நிலையில் 8-வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு மருத்துவர்கள், தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

சென்னையில், அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன் இதனை தெரிவித்தார். முதல்வர் பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அவர் அறிவித்ததுடன், போராட்டத்தின் போது அரசு மருத்துவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

You'r reading அரசு மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்.. 8 நாள் ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை