காங்கிரஸ் அரசு கொண்டு வந்த நீட் தேர்வை திரும்ப பெறலாமே? நீதிபதிகள் கேள்வி..

why not bjp government withdraw NEET, high court asked

by எஸ். எம். கணபதி, Nov 5, 2019, 09:23 AM IST

காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு கொண்டு வந்த மற்ற திட்டங்களை முடக்குவது போல், நீட் தேர்வை மத்திய அரசு திரும்பப் பெற்றிருக்கலாமே என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தகுதி தேர்வில்(நீட்) பலர் ஆள் மாறாட்டம் செய்து படிப்பில் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆள் மாறாட்டம் குறித்து சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கில் மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய தகுதி தேர்வு அமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.நாகராஜன், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள 6,976 மாணவர்கள், 7 நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ள 1250 மாணவர்களின் கைரேகை பெறப்பட்டுள்ளது. இவை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

தமிழக அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டியன் கூறுகையில், இந்த கைரேகைகளை சரிபார்த்து முறைகேடுகள் நடந்திருந்தால் அதன் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்றார்.
முன்னதாக, மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதாடும் போது, நீட் தேர்வு எழுத தனியார் பயிற்சி மையங்களில் ரூ.5 லட்சம் வரை கட்டணம் வசூலிப்பதாகவும், நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்டனர்.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், நீட் தேர்வு பயிற்சிக்கு ரூ.5 லட்சம் என்றால், கிராமப்புற மாணவர்களின் டாக்டர் கனவு எப்படி சாத்தியமாகும்? முந்தைய அரசு கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் அடுத்த அரசு முடக்கி வைக்கிறதே, அதே போல காங்கிரஸ்-திமுக அரசு கொண்டு வந்த நீட் தேர்வை இப்போதுள்ள மத்திய அரசு திரும்பப் பெற்றிருக்கலாமே? என்று கேள்வி எழுப்பினர்.

பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருந்ததாவது:

தமிழகத்தில் 48 மாணவர்கள் மட்டுமே தானாக படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சேர்ந்துள்ளனர். மீதி 3033 மாணவர்கள், நீட் தனியார் பயிற்சி மையங்களில் படித்துதான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று சேர்ந்துள்ளார்கள்.

அதே போல், வெறும் 52 மாணவர்கள் மட்டுமே தானாக படித்து நீட் தேர்வில் தேர்ச்ச பெற்று தனியார் மருத்துவக் கல்லூரகளில் சேர்ந்துள்ளனர். 1598 மாணவர்கள் நீட் பயிற்சி மையங்களில் படித்து தேர்ச்சி பெற்று, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். மேலும், 1628 பேர் மட்டுமே முதல் முறை நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். 3103 மாணவர்கள் 2வது, 3வது முறைகளில்தான் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். இந்த தகவல்கள் அரசு அளித்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading காங்கிரஸ் அரசு கொண்டு வந்த நீட் தேர்வை திரும்ப பெறலாமே? நீதிபதிகள் கேள்வி.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை