நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட புதிய தென்காசி மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் ஏற்கனவே 32 மாவட்டங்கள் இருந்தது. இந்நிலையில், வேலூர் மாவட்டத்தை பிரித்து, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை என்று 3 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. நெல்லையை பிரித்து நெல்லை மற்றும் தென்காசி என 2 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதற்கான அரசு அறிவிப்பாணை கடந்த வாரம் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், புதிய மாவட்டமான தென்காசி மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். புதிய மாவட்ட தொடக்க விழா, தென்காசி இசக்கி மகால் வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பட்டனை அமுத்தி புதிய மாவட்டத்தின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். விழாவில் 5 ஆயிரம் பேருக்கு ரூ.100 கோடி மதிப்பிலான உதவிகளை அவர் வழங்கினார்.
விழாவில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்பட அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் உள்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் வரக் கூடிய பகுதிகளின் விவரம், சமீபத்தில் வெளியான அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தென்காசி, சங்கரன்கோவில் என 2 புதிய வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நெல்லை, பாளையங்கோட்டை, மானூர், நாங்குநேரி, சேரன்மாதேவி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், திசையன்விளை என 8 தாலுகாக்கள் நெல்லை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
அதே போல், தென்காசி மாவட்டத்தில், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, ஆலங்குளம், சங்கரன்கோவில், திருவேங்கடம், வி.கே.புதூர் என 8 தாலுகாக்கள் இடம் பெற்றுள்ளன.