சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் ஊரடங்கைத் தளர்த்தி அருவிகளில் மக்கள் குளிக்க அனுமதிக்க வேண்டும் எனச் சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் தென்காசி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சரத்குமார் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:-குற்றாலத்தில் சீசன் காலங்களில் அப்பகுதி மக்களுக்குத் தொழில் மற்றும் வர்த்தகம் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு குற்றால சீசனின் போது ஊரடங்கால் குற்றாலத்திற்குச் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்ததால் அங்குள்ளவர்களின் வர்த்தகம் மற்றும் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது இயல்புநிலை திரும்பி வருவதால், ஆர்ப்பரித்து வரும் நீர்வீழ்ச்சியில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளும் விடுமுறை நாட்களைச் செலவிட்டு நீராட விரும்புவதால் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, பாதுகாப்பை உறுதி செய்து, குற்றாலத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கினால் மக்கள் நீராடி மகிழலாம். முக்கியமாகப் பல மாதங்களாகத் தொழில், வருமானமின்றி வாடும் குற்றாலம் சுற்றுவட்டாரப் பகுதி வியாபாரிகளின் வேதனையை உணர்ந்திருக்கிறேன் என்ற அடிப்படையில் மீண்டும் அவர்களது தொழில் சீரும், சிறப்புமாக மீண்டெழத் தமிழக அரசு உதவ வேண்டும்.
எனவே, தென்காசி மாவட்டம், குற்றால பகுதி மக்களின் வாழ்வாதாரம், சுற்றுலாப் பயணிகளின் விருப்பம், வருவாய் பெருக்கத்தைக் கருத்தில் கொண்டு, மக்கள் குற்றாலம் செல்ல முதல்-அமைச்சர் அனுமதி வழங்கிட வேண்டும்.