உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவதற்கு திட்டமிட்டு ஸ்டாலின், நீதிமன்றத்திற்கு செல்கிறார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரித்து, 35வது மாவட்டமாக திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு திருப்பத்தூர் மாவட்டமும், 36வது மாவட்டமாக ராணிப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு ராணிப்பேட்டை மாவட்டமும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டத் தொடக்க விழா, திருப்பத்தூரில் உள்ள டான்பாஸ்கோ பள்ளியிலும், ராணிப்பேட்டை மாவட்டத் தொடக்க விழா ராணிப்பேட்டையில் உள்ள கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலைய வளாகத்திலும் நடந்தது.
இரண்டு விழாவிலும் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, புதிய மாவட்டங்களை தொடங்கி வைத்தார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் உள்ளூர் அமைச்சர்கள் முன்னிலை வகித்தனர். தலைமை செயலாளர் சண்முகம் வரவேற்று பேசினார்.
விழாக்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அவர் பேசியதாவது:
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்தான் பேசி வருகிறார். உள்ளாட்சி தேர்தல் நிச்சயமாக நடைபெறும். அதற்கான முன்னேற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து விட்டது. ஆனால், ஸ்டாலின் மற்றும் எதிர்கட்சித் தலைவர்கள்தான் திட்டமிட்டு பொய்யான செய்தியை கூறி, மக்களை குழப்பி வருகிறார்கள்.
உள்ளாட்சி தேர்தலை நடத்தும் அமைப்பு, தன்னாட்சி பெற்ற அமைப்பு ஆகும். தமிழகத்தில் இருக்கும் நிலவரத்தை அறிந்து நீதிமன்றத்தின் ஆலோசனையின்படி அவர்கள் செயல்படுகின்றனர். ஆனால், ஸ்டாலின் திட்டமிட்டு நீதிமன்றத்திற்கு செல்கிறார். கொல்லைப்புறம் வழியாக உள்ளாட்சி தேர்தலை நிறுத்த பார்க்கிறார்கள்.
புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதற்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால் வேண்டுமென்றே ஸ்டாலின் பொய்யான தகவலை பரப்பி வருகிறார். 2018-ம் ஆண்டு மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகள் அடிப்படையில்தான் தேர்தல் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
அ.தி.மு.க. அரசு, மத்திய அரசுக்கு கூஜா தூக்குவதாக ஸ்டாலின் கூறுகிறார். மக்களின் நலனுக்காகத்தான் மத்திய அரசுடன் கூட்டணி அமைத்துள்ளோம். அதன் மூலமாக எய்ம்ஸ் மருத்துவமனையும், 9 மருத்துவக் கல்லூரிகளையும் பெற்றுள்ளோம். ஆனால், மத்திய அரசில் திமுக இடம்பெற்றிருந்த போது எத்தனை மருத்துவ கல்லூரிகளை பெற்றீர்கள்? உங்கள் குடும்பத்தினருக்கு அதிகாரத்தை பெறுவதில்தான் குறியாக இருந்தீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.