கைதாகி 100 நாட்கள்.. ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா?

ED provides details of 12 bank accounts, assets abroad in p.chidambaram case

by எஸ். எம். கணபதி, Nov 29, 2019, 09:44 AM IST

ஐ.என்.எஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைதாகி 100 நாட்கள் கடந்து விட்ட நிலையில், அவரது ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் தள்ளி வைத்துள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு வந்த விவகாரத்தில் முறைகேடாக அனுமதி வழங்கியதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடைபெற்றதாக குற்றம்சாட்டி, அமலாக்கத் துறையும் தனியே வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்தது. சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் செப்.5ம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதன்பின்னர், அவரது ஜாமீன் மனுக்களை சிறப்பு நீதிமன்றம், டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தன. இதன்பின், சுப்ரீம் கோர்ட்டில் அவருக்கு சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தது. ஆனால், அதற்கு முன்பாக அமலாக்கத் துறை வழக்கில் அவரை கைது செய்து விட்டனர். அதனால், அவர் தொடர்ந்து திகார் சிறையில் இருந்து வருகிறார்.

சிதம்பரம் கைதாகி நேற்றுடன்(நவ.28) 100 நாட்களாகி விட்டன. இந்நிலையில், அவரது ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. சமுதாயத்தில் முக்கிய அந்தஸ்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சரை கேடிகள் பில்லா, ரங்காவை போல் நடத்துவது தவறானது என்று அவரது சார்பில் சீனியர் வக்கீல்கள் கபில்சிபல், அபிஷேக் சிங்வி உள்ளிட்டோர் வாதாடினர். மேலும், சிதம்பரத்திற்கு எதிராக எந்த ஒரு திடமான சாட்சியமும் இல்லாத நிலையிலும், அவரை பழிவாங்குவதற்காகவே சிறையில் அடைத்து வைத்துள்ளனர் என்றும் வாதாடினர்.

இதற்கு பதிலளித்து சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடும்போது, சட்டவிரோத பணபரிமாற்றம் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கிறது. சிதம்பரத்தின் ஏஜென்டுகள் மூலம் வெளிநாடுகளில் 12 வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. 16 நாடுகளில் பினாமி பெயர்களில் சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன. சிதம்பரம் மிகவும் செல்வாக்கானவர்.

அதனால் அவரை வெளியே விட்டால் சாட்சியங்களை கலைத்து விடுவார். அவருக்கு முன்பாக விசாரணைக்கு ஒத்துழைக்க 3 சாட்சிகள் மறுத்து விட்டனர். எனவே, அவரை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது என்று வாதாடினார். மேலும், சீலிட்ட கவரில் சிதம்பரம் தொடர்பான வங்கிக் கணக்குகள், வெளிநாட்டு சொத்துகள் பற்றிய விவரங்களை அமலாக்கத் துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபன்னா, எச்.ராய் ஆகியோர் தீர்ப்பை தள்ளி வைத்தனர்.

You'r reading கைதாகி 100 நாட்கள்.. ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா? Originally posted on The Subeditor Tamil

More Delhi News


அதிகம் படித்தவை