மகாராஷ்டிராவில் அம்மா கேண்டீன்.. ஒரு ரூபாய் கிளினிக்..

by எஸ். எம். கணபதி, Nov 29, 2019, 11:46 AM IST
Share Tweet Whatsapp

தமிழகத்தில் ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகங்களை போல், மகாராஷ்டிராவில் ரூ.10க்கு சாப்பாடு போடும் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படவுள்ளது. மேலும், ஒரு ரூபாய் கிளனிக் தொடங்கப்படும் என்றும் சிவசேனா கூட்டணி அரசு தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் தீவிர இந்துத்துவா கட்சியாக விளங்கிய சிவசேனாவும், மதசார்பற்ற கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் கூட்டு சேர்ந்து ஆட்சியமைத்துள்ளன. முதலமைச்சராக உத்தவ் தாக்கரே நேற்று(நவ.28) பதவியேற்றதும், கூட்டணி அரசின் குறைந்தபட்ச செயல் திட்டம்(சி.எம்.பி) வெளியிடப்பட்டது. மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள ரங்கசாரதா ஓட்டலில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. சிவசேனா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, என்.சி.பி. அமைச்சர் ஜெயந்த் பாடீல், காங்கிரஸ் அமைச்சர் பாலாசாகேப் தோரட் மற்றும் என்.சி.பி மூத்த தலைவர் நவாப் மாலிக் ஆகியோர் வெளியிட்டனர்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஏழைகளுக்கு உணவளிக்கும் வகையில், ரூ.10க்கு சாப்பாடு அளிக்கும் உணவகங்கள் திறக்கப்படும். ஏழைகளின் மருத்துவ வசதிக்காக ஒவ்வொரு தாலுகாவிலும் ஒரு ரூபாய் கிளினிக் தொடங்கப்படும்.

தனியார் நிறுவனங்களிலும் 80 சதவீத வேலைவாய்ப்பு உள்ளூர் நபர்களுக்கே அளிக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும்(அதிமுக அரசு கவனிக்குமா?).

ஆரே பகுதியில் மெட்ரோ ரயில் பணிமனை அமைக்க ஏராளமான மரங்களை வெட்டியதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பெரும் போராட்டங்களை நடத்தினர். எனவே, அந்த பணிமனையை வேறொரு இடத்திற்கு கொண்டு செல்வோம்.

விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். சமுதாயத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கல்வி அளிக்கப்படும். ஏழைகளுக்கு குடிசைகளை மாற்றி, அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித் தரப்படும். இவ்வாறு குறைந்தபட்ச செயல் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகம் போல், மலிவு விலை உணவகம், கருணாநிதி கொண்டு வந்த குடிசைமாற்று வாரியத் திட்டம் போன்றவை இந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அம்மா உணவகத்தைப் பார்த்து ஆந்திராவில் செயல்படுத்தினர். இது போன்ற சமூக நலத் திட்டங்களில் தமிழ்நாடு தான் முன்னோடியாக விளங்குகிறது.


Leave a reply