மேட்டுப்பாளையத்தில் வீடுகள் இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அரசின் அலட்சியத்தால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே கனமழையின் காரணமாக 4 ஓட்டு வீடுகள் இடிந்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மேட்டுப்பாளையத்திற்கு சென்று வீடுகள் இடிந்து விழுந்த பகுதிகளை பார்வையிட்டார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர், நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது :
அந்த சுற்றுச் சுவர் பழுதடைந்திருக்கிறது இந்த பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளுக்கு, மாவட்ட கலெக்டருக்கு, அமைச்சருக்கு தொடர்ந்து புகார் தெரிவித்திருக்கிறார்கள். அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு அலட்சியத்தால், அமைச்சர், அதிகாரிகள் அலட்சியத்தால் இந்த உயிரிழப்புகள் நடந்துள்ளது வேதனை அளிக்கிறது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உறவினர்களுக்கு முறையாக தெரிவிக்காமல் பிரேதப் பரிசோதனை நடத்தியிருக்கிறார்கள். இறந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினரகள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அந்த மக்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்தியிருக்கிறார்கள். தடியடி நடத்தியிருக்கிற காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு அறிவித்துள்ள ரூ.4 லட்சம் நிதி போதாது. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும்.
இப்பகுதியில் பாதிப்படைந்துள்ள வீடுகளை அரசே சரி செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.