உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது.
தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் இது வரை நடத்தப்படவில்லை. மறுவரையறை, கஜாபுயல் என்று ஏதேதோ காரணங்களை கூறி, மாநில தேர்தல் ஆணையமும், அதை ஆட்டுவிக்கும் அதிமுக அரசும் தள்ளிப் போட்டு வந்தன. இதை எதிர்த்து தொடரப்பட்ட பல்வேறு மனுக்கள் சுப்ரீம் கோர்ட் வரை சென்றது. கடைசியாக மாநில தேர்தல் ஆணையம், டிசம்பர் 12ம் தேதிக்குள் தேர்தல் அறிவிப்பாணையை வெளியிட வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையே, தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. உள்ளாட்சி தேர்தல் நடக்க வேண்டிய தருணத்தில் இந்த மாவட்டங்களை அவசரமாக பிரித்தது ஏன்? இதற்கு எப்படி மறுவரையறை செய்யப் போகிறீர்கள்? என்று பிரதான எதிர்க்கட்சியான திமுக கேள்வி எழுப்பியது. மாநில தேர்தல் ஆணையம் உடனடியாக விளக்கம் தராததால், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இதற்கு பின், பழைய மாவட்டங்களின் அடிப்படையில்தான் தேர்தல் நடத்தப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தெரிவித்தனர். அதையே மாநில தேர்தல் ஆணையமும் தெரிவித்தது.
இ்ந்நிலையில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் டிசம்பர் 27, 30 தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார். ஊராட்சி ஒன்றிய வார்டுகள், ஊராட்சி வார்டுகள் ஆகியவற்றுக்கு மட்டும் இரண்டு கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2, 2020ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்காமல், 2 கட்டமாக தேர்தல் நடத்துவதற்கும் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தற்போது டிசம்பர் 6ம் தேதி, தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியிடப்படும் என்றும், அன்றே வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
ஆனால், நாளை(டிச.5) சுப்ரீம் கோர்ட்டில் திமுக தொடர்ந்த வழக்கு மற்றும் இதர உள்ளாட்சி தேர்தல் தொடர்பான மனுக்கள் விசாரணைக்கு வருகின்றன. அதில், புதிய மாவட்டங்களுக்கு மறுவரையறை செய்யாமல் தேர்தல் நடத்த கோர்ட் அனுமதிக்குமா? அல்லது அதை செய்வதற்கு மாநில தேர்தல் ஆணையம் மேலும் கால அவகாசம் கேட்குமா என்பது தெரியவில்லை. அதன் முடிவைப் பொறுத்தே டிச.6ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும் என தெரிகிறது.