105 நாட்களுக்கு பின்பு சிதம்பரத்திற்கு ஜாமீன்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

by எஸ். எம். கணபதி, Dec 4, 2019, 12:19 PM IST
Share Tweet Whatsapp

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைதாகி 105 நாட்களாகி விட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. அவர் நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்லக் கூடாது என்று நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு வந்த விவகாரத்தில் முறைகேடாக அனுமதி வழங்கியதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடைபெற்றதாக குற்றம்சாட்டி, அமலாக்கத் துறையும் தனியே வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்தது. சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் செப்.5ம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதன்பின்னர், அவரது ஜாமீன் மனுக்களை சிறப்பு நீதிமன்றம், டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தன. இதன்பின், சுப்ரீம் கோர்ட்டில் அவருக்கு சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தது. ஆனால், அதற்கு முன்பாக அமலாக்கத் துறை வழக்கில் அவரை கைது செய்து விட்டனர். அதனால், அவர் தொடர்ந்து திகார் சிறையில் இருந்து வருகிறார்.

சிதம்பரம் கைதாகி 105 நாட்கள் ஆகி விட்டது. இந்நிலையில், அமலாக்கத் துறை வழக்கில் ஜாமீன் கேட்டு சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதன் மீது நீண்ட வாதங்களுக்கு பிறகு தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

இன்று அந்த மனுவின் மீது நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபன்னா, எச்.ராய் ஆகியோர் தீர்ப்பளித்தனர். இதில், சிதம்பரத்திற்கு ரூ.2 லட்சத்திற்கான சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கான இருநபர் ஜாமீனிலும் விடுவிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. மேலும், நீதிமன்ற அனுமதியின்றி அவர் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.


Leave a reply