நடிகர் ரஜினி புது கட்சி தொடங்குவது எப்போது? தமிழருவி மணியன் பேட்டி..

by எஸ். எம். கணபதி, Dec 4, 2019, 17:03 PM IST
Share Tweet Whatsapp

நடிகர் ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு புது கட்சி துவங்குவது உறுதி என்று தமிழருவி மணியன் தெரிவித்தார்.

தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலுக்கு முன்பு புது கட்சி தொடங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று ஏற்கனவே ரஜினி அறிவித்திருந்தார். ஆனாலும் எப்போது கட்சி தொடங்கப்படும் என்பது குறித்து அவர் இது வரை உறுதியாக எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், ரஜினிகாந்த்தை போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டில் தமிழருவி மணியன் இன்று காலை சந்தித்தார்.

சந்திப்புக்கு பின் வெளியே வந்த அவர் செய்தியாளர்களுக்கு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், ரஜினியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தேன். அவரது உடல் நலம், குடும்ப நலன் குறித்து விசாரித்தேன். அவரை சந்தித்தில் மகிழ்ச்சி. அவர் கட்சி தொடங்குவது குறித்து அவர்தான் சொல்ல வேண்டும். அவர் பிறந்த நாளில் கட்சி குறித்த அறிவிப்பு வர வாய்ப்பில்லை.

அடுத்தாண்டில் அவர் கட்சி தொடங்குவது உறுதி என்று நான் கருதுகிறேன்.  ரஜினி தினமும் யாரையாவது அழைத்து ஆலோசனை கேட்பவர் இல்லை. ஆழமாக சிந்திப்பவர்.  எந்த விஷயத்திலும் சாதக, பாதகங்களை அலசி ஆராய்பவர். எனது கருத்துகளுக்கும், ரஜினிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ரஜினியும் கமலும் இணைந்து செயல்படுவது பற்றி இருவருமே கருத்து தெரிவித்து விட்டார்கள்.

புதிதாக 5 மாவட்டங்கள் பிரித்துள்ளார்கள். அதற்கு மறுவரையறை செய்ய வேண்டாமா? எனவே, சுப்ரீம் கோர்ட்டில் உள்ள வழக்கு நியாயமானது. எனவே, உள்ளாட்சித் தேர்தல் தற்போது நடைபெற வாய்ப்பு இல்லை என்றுதான் தெரிகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார். ரஜினிகாந்த் தனது நட்சத்திரப்படி பிறந்த நாளை நேற்று கொண்டாடினார் என்பது குறி்ப்பிடத்தக்கது. 


Leave a reply