9 மாவட்டம் தவிர்த்து உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..

SC puts on hold local body polls in 9 newly-carved out TN

by Chandru, Dec 6, 2019, 17:31 PM IST
புதுடெல்லி டிச 6:

தமிழகம் முழுவதுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த கடந்த 2016-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் தேர்தல் நடத்த முடியாத சூழல் உருவானது.
சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில் சுழற்சி முறையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் , தொகுதி மறுசீரமைப்பை செய்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும் கோரிக்கை வைத்தது.அந்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது
இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையம் ஊரக உள்ளாட்சிக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று சென்ற 2-ந்தேதி அறிவிப்பு வெளியிட்டது. கிராம பஞ்சாயத்து தலைவர், உறுப்பினர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், உறுப்பினர், மாவட்ட ஊராட்சி ஒன்றிய தலைவர், கவுன்சிலர் ஆகிய பொறுப்புகளுக்கு தேர்தல் நடக்கிறது. ஆனால் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட வில்லை.
குளறுபடியான இந்த அறிவிப்பை எதிர்த்து மீண்டும் தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட , செங்கல் பட்டு, கள்ளக்குறிச்சி, தென்காசி. ராணிப் பேட்டை, திருப்பத்தூர் மற்றும் ஏற்கனவே இந்த மாவட்டங்களில் அங்கம் வகித்த வந்த திருநெல்வேலி, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம், என மொத்தம் 9 மாவட்டங்களில் மறு வரையறை பணிகள் சட்ட ரீதியாக முடிக்கப்படவில்லை.
இந்நிலையில் சட்டதுக்கு புறம்பாக மாநில தேர்தல் ஆணையம் அவசர அவசரமாக ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவித்திருக்கிறது. சட்டத்துக்கு புறம்பான இந்த அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும் இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப் பட்டிருந்தது.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில், தொகுதி இடஒதுக்கீடு, மறுவரையறை பணிகள் எல்லாம் முடிந்து விட்டன , புதிதாக மாவட்டங்களில், புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னர் தொகுதி மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப் படும் என தெரிவிக்கப்பட்டது.
பின்னர் தி.மு.க. சார்பிலும், உள்ளாட்சி தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப் பட்டது. அதற்கு தேர்தல் ஆணையம் சார்பில் பதில் அளிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படிதான் நாம் நடக்க வேண்டும். தேவைப்பட்டால் தேர்தலை எங்களால் தள்ளிப்போட முடியும் என்று கூறியதுடன் இன்று காலை 10.30 மணி அளவில் உள்ளாட்சி தேர்தல் வழக்கில் தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தனர். அதன்படி இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது.
புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பாப்டே உள்ளிட்ட அமர்வு அனுமதி அளித்து உத்தரவிட்டது. மற்ற 9 மாவட்டங் களுக்கும் 4 மாதத்தில் தொகுதி மறுவரையை உறுதி செய்து தேர்தல் நடத்த வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டது.

You'r reading 9 மாவட்டம் தவிர்த்து உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை