அ.ம.மு.க. அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு...

by எஸ். எம். கணபதி, Dec 9, 2019, 10:44 AM IST
Share Tweet Whatsapp

அ.ம.மு.க.வை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளனர். இது பற்றி, வரும் 9ம் தேதி தேர்தல் ஆணையம் முறையான அறிவிப்பு வெளியிடும் என்று வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்பு, அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா நடராஜன், அக்கட்சியின் பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டார். அதன்பின், முதல்வர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். அதிமுக சட்டசபைக் கட்சித் தலைவராகவும் சசிகலாவை தேர்வு செய்தனர். தொடர்ந்து கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிறைபிடிக்கப்பட்டனர். ஓ.பி.எஸ். தர்மயுத்தம் நடத்தினார்.

இதன் தொடர்ச்சியாக, சசிகலாவுக்கு ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனையை உறுதி செய்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றார். டி.டி.வி.தினகரன் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆனால், அதற்கு பின்பு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கைகோர்த்தனர். டி.டி.வி.தினகரனை கட்சியில் ஓரங்கட்டினர்.

இதையடுத்து, டி.டி.வி.தினகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை துவக்கினார். இதன் பொதுச் செயலாளராக சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனும் அறிவிக்கப்பட்டனர். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் பொது சின்னம் கொடுக்க தேர்தல் ஆணையம் மறுத்ததால், அ.ம.மு.க.வை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, அ.ம.மு.க. பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரன் தேர்வு செய்யப்பட்டார். சசிகலா விடுதலை செய்யப்பட்டதும் அவருக்கு தலைவர் பதவி தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. போட்டியிடவில்லை. அ.ம.மு.க.வை தேர்தல் கமிஷனில் பதிவு செய்து பொது சின்னம் பெற்ற பிறகு தேர்தலில் போட்டியிடுவோம் என்று டி.டி.வி.தினகரன் அறிவித்தார். இதன்படி, தற்போது தேர்தல் ஆணையத்தில் புதிய அரசியல் கட்சியாக அ.ம.மு.க. பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறுகையில், அ.ம.மு.க.வை புதிய அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கு கடந்த ஏப்ரல் 22ம் தேதி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்தோம். அதன்பிறகு, ஆட்சபேணைகள் குறித்த விளம்பரம் வெளியிட்டோம். இதில், அ.தி.மு.க.வினர் உள்பட சிலர் ஆட்சபேணை தெரிவித்தனர். ஜெயலலிதா பெயரை பயன்படுத்தக் கூடாது என்று அதிமுக ஆட்சேபம் தெரிவித்தது. இதற்கு நாங்கள் அளித்த விளக்கத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. தற்போது அ.ம.மு.க.வை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அறிவித்திருக்கிறது. இது பற்றிய விவரங்களை டிச.9ம் தேதி, தேர்தல் ஆணையம் வெளியிடும் என்றார்.


Leave a reply