ஊரக உள்ளாட்சி தேர்தல்.. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

TamilNadu local body election counting Started

Jan 2, 2020, 10:19 AM IST

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை பிரித்து எண்ணும் பணி இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மதியத்திற்கு மேல் அரசியல் கட்சிகளின் வெற்றி நிலவரம் தெரிய வரும்.


தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் தள்ளிப் போடப்பட்டு வந்தது. இதன் பின்பு, புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. சென்னை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால் இங்கும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை.


தற்போது, 91,975 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள், 315 வாக்கு எண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில், வாக்குகளை எண்ணும் பணி இன்று(ஜன.2) காலை 7 மணிக்கு தொடங்கியது. கண்காணிப்பாளர்கள், வேட்பாளர்களின் ஏஜென்டுகள் முன்பாக வாக்குப் பெட்டிகளின் சீல் உடைக்கப்பட்டு திறக்கப்பட்டு்ள்ளன. இதன்பிறகு, வாக்கு எண்ணும் அறைகளுக்கு பெட்டிகளை கொண்டு சென்றனர். ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் என்று 4 பதவிகளுக்குமாக ஒவ்வொரு வாக்காளரும் தலா 4 வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இவற்றை பிரிக்கும் பணி முதலில் தொடங்கியது.

வாக்கு எண்ணும் அறையில் போடப்பட்டுள்ள 30 மேஜைகளில் வாக்குச்சீட்டுகள் கொட்டப்பட்டு, 4 வாக்குகளும் தனித்தனியே பிரிக்கப்படுகின்றன. இந்த வாக்குச்சீட்டுகளை பிரிக்கும் பணியே மதியம் 12 மணி வரை நீடிக்கலாம் எனத் தெரிகிறது. எனவே, அதற்குப் பிறகுதான் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.
4 பதவிகளுக்கும் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக தனித்தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்தந்த அறைகளுக்கு வாக்குச் சீட்டுகள் கொண்டு செல்லப்பட்டு, அங்குதான் வாக்குகள் எண்ணப்படுகின்றன.


கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆயிரம் வாக்குகளுக்கு குறைவாகவும், ஊராட்சி தலைவர் பதவிக்கு இரண்டாயிரம், மூவாயிரம் வாக்குகள் தான் இருக்கும் என்பதால், அதன் முடிவுகள் முதலில் தெரிய வரும். ஆனால், இந்த பதவிகள் கட்சி சார்பற்று நடத்தப்பட்டுள்ளதால் பெரிய பரபரப்பு இருக்காது.
ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு சில ஆயிரம் வாக்குகளை எண்ண வேண்டியுள்ளதால், மதியம் 3 மணிக்கு மேல் அரசியல் கட்சிகளின் வெற்றி நிலவரம் தெரிய வரும்.


வாக்கு எண்ணிக்கையின் போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு வீடியோவிலும் காட்சிகள் பதிவு செய்யப்படுகிறது.
வாக்குகளை பிரிக்கும் போது முறைகேடுகள் நடக்கக் கூடாது என்பதற்காக திமுக தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, தற்போது வாக்கு எண்ணும் பணி முழுவதும் சி.சி.டி.வி. கேமராவில் பதிவு செய்யப்படுகிறது. இதை ஐகோர்ட்டில் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, அரசியல்கட்சியினர் குழப்பம் விளைவித்தால் ஐகோர்ட் கண்டனத்துக்கு உள்ளாக நேரிடும்.

You'r reading ஊரக உள்ளாட்சி தேர்தல்.. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை