ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 2146 இடங்களில் திமுகவும், 1911 இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகளில் திமுக 242 இடங்களையும், அதிமுக 225 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் தள்ளிப் போடப்பட்டு வந்தது. இதன் பின்பு, புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. சென்னை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால் இங்கும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை.
தற்போது, 91,975 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள், 315 வாக்கு எண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வாக்குகளை எண்ணும் பணி நேற்று(ஜன.2) காலை 7 மணிக்கு தொடங்கியது. கண்காணிப்பாளர்கள், வேட்பாளர்களின் ஏஜென்டுகள் முன்பாக வாக்கு பெட்டிகள், வாக்கு எண்ணும் அறைகளுக்கு பெட்டிகளை கொண்டு சென்றனர்.
ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் என்று 4 பதவிகளுக்குமாக ஒவ்வொரு வாக்காளரும் தலா 4 வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இவற்றை பிரிக்கும் பணி முதலில் தொடங்கியது.
4 பதவிகளுக்கும் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக தனித்தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டு எண்ணப்பட்டன. ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவிகளுக்கு கட்சி சார்பற்ற முறையில் தேர்தல் நடந்ததால், வாக்குகளை எண்ணி முடித்ததும் பெரும்பாலும் முடிவுகளை உடனடியாக அறிவித்தனர்.
அதே சமயம், 515 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள், 5090 ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர்கள் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதனால், வாக்கு எண்ணிக்கையின் போது எதிர்க்கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்குகள் பெற்றிருந்தால், முன்னிலை நிலவரத்தைக் கூட அறிவிக்காமல் அதிகாரிகள் மவுனம் காத்தனர். அதே போல், திமுக கூட்டணி வெற்றி பெற்ற இடங்களில் முடிவுகளை அறிவிக்காமல் தாமதம் செய்து வந்தனர்.
இதையடுத்து, திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்று தேர்தல் ஆணையர் பழனிசாமியை சந்தித்து புகார் கொடுத்தார். ஆனாலும் ஆளும்கட்சியினர் பல இடங்களில் திமுக வெற்றியை அறிவிக்க விடாமல் அதிகாரிகளை மிரட்டினர்.
இந்த சூழ்நிலையிலும், திமுக கூட்டணியே அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 5090 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 2146 இடங்களில் திமுகவும், 1911 இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. பாமக 94 இடங்களையும், தேமுதிக 74 இடங்களையும், பாஜக 77 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
அதே போல், 515 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகளில் திமுக 242 இடங்களையும், அதிமுக 225 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. பாமக 9 இடங்களையும், தேமுதிக 4 இடங்களையும், பாஜக 6 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பல இடங்களில் திமுக மற்றும் அதிமுகவினரிடையே வாக்குவாதம், கைகலப்பு நடைபெற்று வருகிறது. இதனால், பல இடங்களில் முடிவுகள் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் முழு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.