ஊராட்சி மன்றத் தேர்தலில் 22 வயது இளம்பெண் வெற்றி.. தலைவரான 82 வயது மூதாட்டி

by எஸ். எம். கணபதி, Jan 3, 2020, 12:50 PM IST

உள்ளாட்சி மன்றத் தேர்தலில் 22 வயது இளம் பெண் முதல் 82 வயது மூதாட்டி வரை பலரும் வெற்றி பெற்றுள்ளனர்.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 91,975 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு 2 கட்டங்களாக இந்த தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள் 315 மையங்களில் நேற்று முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

தேர்தல் முடிவுகளில் 22 வயது இளம்பெண் முதல் 82 வயது மூதாட்டி வரை பலர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். திருத்துறைப்பூண்டி அருகே பூசலாங்குடி என்ற கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் 22 வயது இளம்பெண் ஆர்.சுபிதா வெற்றி பெற்றுள்ளார். இவர் திருவாரூரில் உள்ள திரு.வி.க. கல்லூரியில் பி.பி.ஏ. படித்து முடித்துள்ளார்.

ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு கட்சி சார்பற்ற முறையில்தான் தேர்தல் நடத்தப்படுகிறது. எனினும், சுபிதா திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சியில் 82வயது மூதாட்டி போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். வெள்ளக்கோவில் ஒன்றியத்தில் உள்ள மேட்டுப்பாளையம் என்ற கிராம ஊராட்சியின் மன்றத் தலைவர் பதவிக்கு விசாலம் என்ற 82வயது மூதாட்டி போட்டியிட்டார். நேற்று வெளியான முடிவுகளில் இவர் வெற்றி பெற்றுள்ளார். இந்த வயதிலும் சேவையாற்றத் துடிக்கும் அவரை கிராம மக்கள் வாழ்த்தினர்.

You'r reading ஊராட்சி மன்றத் தேர்தலில் 22 வயது இளம்பெண் வெற்றி.. தலைவரான 82 வயது மூதாட்டி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை